பினாங்கில் 97.92% ரொக்கமற்ற பரிவர்த்தனை பதிவு – ஜேசன்

669e68e8 3eb8 4f22 8629 a4373f4428d6

பெங்காலான் கோத்தா – பினாங்கு மாநிலம் ரொக்கமற்ற (cashless) பரிவர்த்தனைகளை அமல்படுத்துவதில் தொடர்ந்து சிறப்பான முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது. 2025ஆம் ஆண்டில், ரொக்கமற்ற
பரிவர்த்தனைகளின் பயன்பாடு 97.92 சதவீதத்தை எட்டியுள்ளது.

மாநில ஊராட்சி, நகர் & புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜேசன் எங் மோய் லாய், இந்த சாதனை பினாங்கை மலேசியாவில் மிக உயர்ந்த டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாட்டைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக நிலைநிறுத்துகிறது, என்றார்.
ec505798 9aa8 42d8 a516 b89bc812f2c6

“ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் தற்போது பொதுச் சேவைகளின் விரைவான மற்றும் அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடிய டிஜிட்டல் மாற்றத்திற்கான முக்கிய தலமாகத் திகழ்கிறது.

“வரிக் கட்டணம், அபராதம், வணிக உரிமம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளின் (PBT) சேவைகள் அனைத்தும் தற்போது எளிதாகவும் திறம்படவும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
fe7b4a7e 0b5e 4025 910e 05145ad86224

“மேலும், பொதுமக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று அவர் பினாங்கு மாநில பொதுத்துறை ரொக்கமற்ற பரிவர்த்தனை விருதளிப்பு விழாவில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தகம் மற்றும் தேசிய ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர் கோ சூன் ஐய்க், பெங்காலான் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினர் வோங் இயூ ஹர்ங், பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மேயர் டத்தோ Ir.இராஜேந்திரன், செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ படேருல் அமின் பின் அப்துல் ஹமிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த சாதனை 2030ஆம் ஆண்டுக்குள் பினாங்கை முழுமையான ரொக்கமற்ற மாநிலமாக மாற்றும் இலக்கை நோக்கி எடுத்த முக்கியமான முயற்சியாகும் என்றும் மோய் லாய் குறிப்பிட்டார்.

“இந்த வெற்றி, டிஜிட்டல் கட்டண முறைகளின் மீது மக்களின் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

“அதே சமயம், இணைய பாதுகாப்பு, ஆன்லைன் மோசடி போன்ற சவால்களை எதிர்கொள்வதிலும், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை உறுதி செய்வதிலும் மாநில அரசு உறுதியாக உள்ளது,” என்றார்.

மேலும், இந்த அங்கீகாரம் பிற துறைகள் மற்றும் அமைப்புகளையும் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்த ஊக்குவிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநில அரசு Payments Network Malaysia (PayNet) தனியார் நிறுவனத்துடன் 2022ஆம் ஆண்டில் தொடங்கிய மூலோபாய ஒத்துழைப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மொத்தம் 24 துறைகள் மற்றும் அமைப்புகள் பங்கேற்று அதில் இந்த ரொக்கமற்ற முயற்சியில் சிறப்பாக பங்காற்றிய துறைகள் விருதுகள் பெற்றன.

இந்த அங்கீகாரம் நான்கு முக்கிய பிரிவுகளில் வழங்கப்பட்டன. இதில் ரிம30,000 வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த முயற்சி அரசு வருவாய் வசூல் திறனை அதிகரிப்பதுடன், பண பரிவர்த்தனைகளின் மீதான சார்பை குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.