ஜார்ச்டவுன் – “பினாங்கு முதலமைச்சருக்கான பதவிக்காலம் இரண்டு தவணை வரம்பு தற்போதைக்குத் தொடரும். அதை நிரந்தர 10 ஆண்டு வரம்பாக மாற்ற மாநில அரசுக்கு தற்போது எந்தத் திட்டமும் இல்லை. எதிர்காலத்தில் மத்திய அரசின் முன்னேற்றங்களை கவனித்து பின்னர் பரிசீலிக்கப்படும்,” என மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகையில், “இரண்டு தவணைகள்” என்ற தற்போதைய அரசியலமைப்பு வரையறையை “நிரந்தர 10 ஆண்டுகள்” என்பதனை மாற்ற மாநில அரசுக்கு தற்போது எந்தத் திட்டமும் இல்லை, என்றார்.
மேலும், மாச்சாங் புபுக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் எழுப்பிய வாய்மொழி கேள்விக்கும், அதனைத் தொடர்ந்து அவர் மற்றும் புக்கிட் தெங்கா தொகுதி உறுப்பினர் கூய் ஹ்சியாவ் லியூங் எழுப்பிய துணைக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் போது சாவ் இவ்வாறு விளக்கமளித்தார்.
மத்திய அரசில் முன்மொழியப்பட்டுள்ள 10 ஆண்டு வரம்பை போன்று, மாநிலத்திலும் இரண்டு தவணை வரம்பை மொத்தம் 10 ஆண்டுகளாக மறுவரையறை செய்ய பரிசீலிக்கப்படுமா என லீ கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சாவ், தற்போதைய “இரண்டு தவணை” என்ற விளக்கம் மாநில சட்டமன்றத்தின் ஒரு காலக்கட்ட வரையறையை அடிப்படையாகக் கொண்டது, என்றார்.
“ஒரு தவணை என்பது சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடக்கத்திலிருந்து அது கலைக்கப்படும் வரை நீடிக்கும். தேர்தலுக்குப் பிறகு தொடங்கும் அடுத்த சட்டமன்றத்தின் முதல் கூட்டத்திலிருந்து இரண்டாவது தவணை ஆரம்பமாகிறது,” என்று அவர் கூறினார்.
சட்டமன்றம் ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் முன்பே கலைக்கப்படக்கூடும் என்பதால், இரண்டு தவணைகளில் முதலமைச்சரின் மொத்த பதவிக்காலம் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருக்கலாம் என்றும் அவர் விளக்கினார்.
“இத்தகைய சூழலில், முதல் மற்றும் இரண்டாவது தவணைகளின் மொத்த காலம் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருக்கலாம். ஆனால், அது 10 ஆண்டுகளை மீறாது,” என்றார்.
2018ஆம் ஆண்டு அரசியல் நிலைத்தன்மை வலுவாக இருந்த காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
அதேவேளை, 2018 மற்றும் 2022க்குப் பின்னர் நாட்டின் அரசியல் சூழல் மாறி, முன்கூட்டிய சட்டமன்ற கலைப்புகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இன்றைய சூழலில் சட்ட ரீதியான அம்சங்களுடன் அரசியல் காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால் மாநிலமும் அதனைப் பின்பற்ற வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது,” என்று அவர் கூறினார்.
மத்திய அளவில் அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டால், பினாங்கும் எதிர்காலத்தில் அதனை ஆலோசிக்க பரிசீலிக்கலாம் என்றும் சாவ் சட்டமன்றத்தில் குறிப்பிட்டார்.