ஜார்ச்டவுன் – இளம் காற்பந்து வீரர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் முயற்சிகளை பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கம் (PIFA) தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, 17 வயதுக்குட்பட்டோருக்கான சிவம் சவால் கோப்பை காற்பந்து போட்டி நான்காவது ஆண்டாக கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் பினாங்கு, கெடா மற்றும் பேராக் மாநிலங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன.

PIFA துணைத் தலைவர் ஹைத்ரியான் டாஸ், 40, கூறுகையில், இப்போட்டி இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதுடன், மாநில மற்றும் தேசிய அணிகளுக்கான திறமையான வீரர்களை அடையாளம் காணும் தளமாகவும் விளங்குகிறது என்றார்.

“வீரர்களின் திறன், ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதே எங்களது முக்கிய நோக்கமாகும். ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஒரு வீரராவது மாநில அல்லது தேசிய அணிக்குத் தேர்வாகி முன்னேறினால், அதுவே எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும்,” என்றார்.

கடந்த ஆண்டு சிவம் கோப்பை காற்பந்து போட்டியில் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்ட பேராக்கைச் சேர்ந்த மோசஸ் ராஜ், பின்னர் ஜோகூர் அணிக்காக விளையாடியதுடன், மலேசிய 19 வயதுக்குட்பட்டோர் தேசிய அணியிலும் இடம்பெற்றதாக ஹைத்ரியான் தெரிவித்தார்.
இப்போட்டியை எம்.பி.பி.பி கவுன்சிலர் விஸ்வநாதன், வாசுதேவன் வேலாயுதம், FAP தொழில்நுட்ப இயக்குநரும் முன்னாள் தேசிய வீரருமான நடராஜன் செல்லமுத்து, PIFA ஆலோசகரும் Tritoni நிறுவன உரிமையாளருமான ஷங்கர் முனியாண்டி உள்ளிட்டோர் இணைந்து தொடக்கி வைத்தனர்.
இம்முறை Universal SC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. PPIFC, Garuda FC மற்றும் Pinang Youth SC அணிகள் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றன.
Universal SC அணியின் ரிஷி குமார் சிறந்த வீரராகவும், PPIFC அணியின் விக்னேஸ்வரன் சிறந்த இளம் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டனர். கோகுலன் சிறந்த கோல் காப்பாளராகவும், லீவிஸ் அதிக கோல்கள் அடித்த வீரராகவும் கௌரவிக்கப்பட்டனர்.
இப்போட்டிக்கு சிவம் கேட்டரிங் முதன்மை ஆதரவாளராக விளங்கியது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் பங்கேற்புக் கட்டணம் வசூலிக்கப்படாததால், ஆதரவாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என ஹைத்ரியான் கூறினார்.
இதனிடையே, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கான PIFA திறந்த சவால் போட்டியையும் PIFA நடத்தி வருவதாகக் கூறிய அவர், 50 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் வீரர்களுக்கான (Veteran Masters) போட்டியை வரும் நவம்பர் மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், PIFA தலைவர் பிரேம்குமார் மற்றும் போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கமலேஸ்வரனுடன் இணைந்து இப்போட்டியை நடத்துவதில் தாமும் பங்களித்து வருவதாக ஹைத்ரியான் தெரிவித்தார்.
PIFA-வின் இளம் வீரர்களை உருவாக்கும் முயற்சிகள் U17 பிரிவுடன் நின்றுவிடவில்லை. 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்காக பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை உள்ளடக்கிய காற்பந்து போட்டிகளும் முன்னதாக நடத்தப்பட்டுள்ளன.
எனினும், பொருத்தமான மைதானம் கிடைப்பது, போதிய நடுவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இல்லாமை, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்டவை இத்தகைய போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவதில் எதிர்நோக்கும் முக்கிய சவால்களாக உள்ளதாக ஹைத்ரியான் கூறினார்.