பாகான் டாலாம் – மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தின் கீழ், ‘முத்தியாரா வீடமைப்புத் திட்டம்’ (RMKu) வகை ‘A’ வீடுகளுக்கான சாவிகளும் வீட்டு உரிமைக் கடிதங்களும் 187 பெறுநர்களுக்கு வழங்கப்பட்டன.

வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜு கூறுகையில், 650 சதுர அடி பரப்பளவுள்ள இந்த குடியிருப்புகள் மூன்று படுக்கையறைகளைக் கொண்டவை என்றும், மக்கள் சொந்த வீடு வாங்குவதற்கு உதவும் வகையில் ரிம42,000 என்ற மலிவு விலையில் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், கட்டுமானச் செலவுகள் அதிகரித்தப் போதிலும், வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து வழங்குவதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய நிலவரங்களின்படி, இத்தகைய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை நிர்மாணிப்பதற்கான செலவு ஒரு யூனிட்டிற்கு ரிம170,000 முதல் ரிம180,000 வரை மதிப்பிடப்படுகிறது. அதேவேளையில், ஒரு கடைவீட்டின் கட்டுமானச் செலவு சுமார் ரிம300,000 ஆகும்.

“இந்த வாங்கும் சக்திக்கு உட்பட்ட திட்டத்தின் மொத்த கட்டுமானச் செலவு கிட்டத்தட்ட ரிம29 மில்லியன் ஆக இருந்தாலும், அது வெறும் ரிம9 மில்லியன் என்ற மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.”
“இதன் மூலம், குறைந்த வருமானம் கொண்ட பினாங்கு மக்களுக்கு சொந்த வீடு பெறும் வாய்ப்பை உறுதி செய்ய மாநில அரசு சுமார் ரிம20 மில்லியனை ஒதுக்கியுள்ளது,” என்று அவர் வாங்கும் சக்திக்கு உட்பட்ட மாக் மண்டின் இண்டா அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தின் சாவி ஒப்படைப்பு விழாவில் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பாகன் டாலாம் மாநில சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கின், பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியத்தின் (LPNPP) பொது மேலாளர் கைருல்நிசாம் ஹாஷிம் மற்றும் PDC Properties Sdn. Bhd நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி இஸ்மாயில் இஷாக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் கருத்து தெரிவித்த சுந்தராஜூ, மாநில மக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், பினாங்கு மாநில அரசு LPNPP வாயிலாக 220,000 ‘முத்தியாரா’ வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதேவேளையில், கடந்த ஆண்டு முதல் கட்டுமான நிறுவனங்களால் நிர்மாணிக்கப்பட்ட ரிம100,000-க்கும் குறைவான விலையுடைய, விதிமுறைகளுக்கு இணங்கும் வீடுகளை LPNPP வாங்கி வருவதாகவும், பின்னர் அவை தவணை முறையில் மக்களுக்கு மறுவிற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
“பொது மக்கள் வங்கிக் கடன் பெற வேண்டிய அவசியமின்றி, சொந்த வீடு வாங்குவதைக் எளிதாக்கவே நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம், அதிக வட்டி விகிதங்களையும், ரிம6,000 வரை செலுத்த வேண்டிய முன்பணச் சுமையையும் தவிர்க்க முடிகிறது.
‘மாக் மண்டின் இண்டா’ திட்டத்தின் கீழ், வீடுகள் தவணை முறையில் வழங்கப்படுகின்றன. இதில், பெறுநர்கள் 15 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரிம250 மட்டுமே செலுத்தினால் போதுமானது. அதன் பின்னர், அந்த வீடு முழுமையாக அவர்களது சொந்த உரிமையாக மாறும்,” என்று அவர் தெரிவித்தார்.
முத்தியாரா வீடமைப்பு வகை ‘A’ வீட்டைத் தவிர, மாநில அரசு ரிம200,000 முதல் ரிம300,000 வரையிலான விலையில் வகை C வீடமைப்புத் திட்டத்தையும் வழங்குகிறது. இதுவும் தவணை முறையில் வாங்கும் வசதியுடன் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
“இது பினாங்கில் மக்கள் சொத்து வாங்குவதை எளிதாக்குவதற்கான மாநில அரசின் முயற்சியாக அமைகிறது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பெறுநர்களில் ஒருவரான 49 வயதுடைய கே.கோபிநாத், நீண்ட காலமாக வாடகை வீட்டில் வசித்த பிறகு, இறுதியாகத் தனக்கென சொந்த வீடு கிடைத்ததற்கு மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
“நீண்ட காலமாகத் தனது மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தனக்கு பிள்ளைகள் இல்லாததாகவும் அவர் கூறினார். கோபிநாத், தனது 81 வயதான தாயாருடன் அந்த வீட்டில் வசிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
“நான் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தேன். ஆனால், ஒரு விபத்தில் கீழே விழுந்ததில் எனது வலது காலில் காயம் ஏற்பட்டது. அதனால் சரியாக நடப்பதில் சிரமம் ஏற்பட்டதுடன், சில நேரங்களில் சக்கர நாற்காலியையும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
“முன்னதாக, நான் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தேன். ஆனால், ஒரு விபத்தில் கீழே விழுந்ததில் எனது வலது காலில் காயம் ஏற்பட்டது. அதனால் சரியாக நடப்பதில் சிரமம் ஏற்பட்டதுடன், சில நேரங்களில் சக்கர நாற்காலியையும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
“அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் வேலையை இழந்தேன். தற்போது வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்காக பகுதி நேர பாதுகாவலராக மட்டுமே பணியாற்றி வருகிறேன்.
“முன்னதாக, பெர்மாத்தாங் பாவில் மாதம் ரிம900 வாடகையில் ஒரு வீட்டில் வசித்தேன். ஆனால், வருமானம் நிலையானதாக இல்லாததால் அந்த வாடகையைத் தொடர்ந்து செலுத்த முடியவில்லை.
“இந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். ஏனெனில், மாதம் ரிம250 மட்டுமே செலுத்தினால் போதும்; 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வீடு முழுமையாக எனக்கு சொந்தமாகிவிடும்,” என்று அவர் கூறினார்.