மாணவர்களின் ஆன்மிக வளர்ச்சிக்கு தேவாரம் வகுப்புகள் அவசியம்

Admin
fb img 1785137174321

ஜார்ச்டவுன்: மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில ஜார்ஜ்டவுன் பேரவை ஏற்பாடு செய்த 48ஆவது திருமுறை ஓதும் விழா அண்மையில் இராமதாசர் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.

fb img 1785137204280

இந்நிகழ்ச்சியை ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான ஆர்.எஸ்.என் இராயர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
fb img 1785137193418

“குழந்தைகளிடையே இரக்கம், அன்பு, நேர்மை மற்றும் தர்ம நெறிகளுடன் வளர்வதை உறுதி செய்யும் வகையில், அவர்களிடையே சமய உணர்வும் நற்பண்புகளையும் சிறுவயது முதலே வளர்ப்பது அவசியம் என ஆர்.என் இராயர் வலியுறுத்தினார்.

fb img 1785137186450

மேலும், இளைய தலைமுறையினர் நவீன உலகில் எதிர்கொள்ளும் பல்வேறு சமூகச் சீர்கேடுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சமயக் கல்வியும் ஆன்மிக வளர்ப்பும் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பெற்றோர் தங்களது பிள்ளைகளின் சமயக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், இந்து சமயப் பண்பாடுகள் மற்றும் விழுமியங்களை அடுத்த தலைமுறையினரிடம் தொடர்ந்து கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“மேலும், மாணவர்களிடையே சமய அறிவையும் ஆன்மிகப் பண்புகளையும் வளர்க்கும் வகையில், பள்ளி நேரத்திலேயே தேவாரம் வகுப்புகளை நடத்துவதற்கான நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.

“மாணவர்கள் பாடப் புத்தகக் கல்வியுடன் சமயக் கல்வியையும் கற்றுக்கொள்வது, அவர்களின் ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கு முக்கியமானதாகும் என்று மலேசிய இந்து சங்க பினாங்கு பேரவைத் தலைவர் விவேக ரத்னா தர்மன் வலியுறுத்தினார்.

அதேவேளையில், மாணவர்கள் திருமுறை ஓதுதல் உள்ளிட்ட சமயப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பதன் மூலம், அவர்களின் இணைப்பாட நடவடிக்கைகளுக்கான ‘PAJSK’ புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற சமயப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கு மாநிலக் கல்வித் துறை அங்கீகாரம் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், இதன் மூலம் மாணவர்கள் சமயக் கல்வியிலும் இணைப்பாட நடவடிக்கைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்திருமுறை ஓதும் விழாவில் மாணவர்கள் தனிநபர் மற்றும் குழு முறையில் தேவாரம் ஓதுதல், பேச்சுப் போட்டி, திருமுறைப் பதிகப் பாராயணம், பஞ்சபுராணம் உள்ளிட்ட பல்வேறு சமயப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பினாங்கு மாநிலத்தில் உள்ள 12 பேரவைகள் ஏற்பாட்டில் நடைபெறும் திருமுறை தொடர்பான போட்டிகளில் இவ்வாண்டு மொத்தம் 3,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதாக தர்மன் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான போட்டி ஆகஸ்ட் 2ஆம் தேதியும், தேசிய அளவிலான போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டு தேசிய அளவிலான போட்டியில் பினாங்கு மாநிலப் பேரவை இரண்டாம் இடத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டும் மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று பினாங்குக்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஆண்டுதோறும் இந்த சமய நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பங்களிப்பு வழங்கி வரும் பெற்றோர், மாணவர்கள், போட்டியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் சார்பில் நன்றித் தெரிவித்தனர்.