சிம்பாங் அம்பாட் – கம்போங் மாக்காவ் சுவா குடியிருப்பாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த குடியிருப்புப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், பெக்கட்ரா இண்டா முத்தியாரா அடுக்குமாடிக் குடியிருப்பில் முத்தியாரா வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வகை A வீடுகளுக்கான சாவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், சுற்றுச்சூழல் மற்றும் வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு, 14 குடும்பங்களுக்கு அதிகாரப்பூர்வமாக வீட்டு உரிமைக் கடிதங்களை வழங்கியதுடன், வீடுகளுக்கான சாவிகளையும் வழங்கினார்.
டத்தோஸ்ரீ சுந்தராஜு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, கம்போங் மாக்காவ் சுவா மக்களின் நீண்டகால குடியிருப்புப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுத்தியதுடன், அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான வீடுகளைப் பெற்றுத்தரும் முக்கியமான நடவடிக்கையாகவும் அமைந்தது.
கம்போங் மாக்காவ் சுவா பகுதியில் உள்ள நிலத்தை அதன் உரிமையாளர் விற்பனை செய்ய முடிவு செய்ததைத் தொடர்ந்து, அங்கு பல ஆண்டுகளாக வசித்து வந்த குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டனர்.
குறிப்பாக, பெரும்பாலான குடியிருப்பாளர்கள் மூத்த குடிமக்களாக இருந்ததுடன், வழக்கமான வங்கிக் கடன் அல்லது வீடு வாங்கும் திட்டங்களின் மூலம் புதிய வீடுகளைப் பெறுவதற்குத் தேவையான பொருளாதார வசதியும் அவர்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பினாங்கு மாநில அரசும், மாநில வீடமைப்பு வாரியமும் இணைந்து, குடியிருப்பாளர்களின் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப தாமான் பெக்கட்ரா இண்டா அடுக்குமாடியில் ரிம42,000 மதிப்புடைய முத்தியாரா வீடமைப்பில் வாடகை கொள்முதல் (RTO) திட்டத்தின் கீழ் குடியிருப்பாளர்களுக்கு வீடுகள் வழங்கியது.
இந்த அடுக்குமாடி வீடமைப்புத் திட்டம் இந்த ஆண்டு ஏப்ரல்,7 ஆம் நாள் அன்று நிறைவடைந்தது. மூன்று கட்டிடங்களைக் கொண்ட இத்திட்டத்தில் மொத்தம் 336 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டின் பரப்பளவும் சுமார் 650.8 சதுர அடி என்பதுடன், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு வாகன நிறுத்துமிடமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களுக்கு வாங்கும் சக்திக்கு உட்பட்ட விலையில் வீட்டுவசதியை விரிவுபடுத்தும் நோக்கில், வீடமைப்பு வாரியம் இத்திட்டத்தின் பிளோக் சி-இல் உள்ள 107 வீடுகளையும் வாங்கி, அவற்றை வாடகை கொள்முதல் திட்டத்தின் கீழ் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக டத்தோஸ்ரீ சுந்தராஜு கூறுகையில், கம்போங் மாக்காவ் சுவா மக்களின் பிரச்சனை தனியார் நிலம் தொடர்பானதாக இருந்தபோதிலும், அவர்களின் மீது மாநில அரசு அக்கறை கொண்டு செயல்பட்டது, என்றார்.
“மக்கள் சிரமத்தை எதிர்கொள்ளும்போது, அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, நடைமுறைக்கு ஏற்ற, மனிதாபிமானமான மற்றும் நீடித்த தீர்வைக் கண்டறிவதே மாநில அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
“இன்றை விழாவில் 14 குடும்பங்களுக்கு வீட்டின் சாவிகளை வழங்கியிருப்பது, அவர்களின் நீண்டகால நிச்சயமற்ற நிலைக்கு ஒரு புதிய தொடக்கமாகும். இது ஒரு வீட்டை வழங்கும் நிகழ்வு மட்டுமல்ல; அவர்களது குடும்பங்களுக்கும் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பான அடித்தளத்தை உருவாக்குவதாகும்,” என்றார்.

நீண்டகாலமாக நிலவிய குடியிருப்பு நிச்சயமற்ற நிலையிலிருந்து இன்று 14 குடும்பங்கள் நிலையான வீட்டுவசதியை பெற்றுள்ளன.
இந்தப் புதிய வீடு, அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் பாதுகாப்பான, அமைதியான மற்றும் வளமான வாழ்க்கைக்கான புதிய தொடக்கமாக அமையட்டும்.