ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், நடப்பு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மாநில அரசு நிலத்தை விற்பனை செய்வதாக கூறிய பெனாகா சட்டமன்ற உறுப்பினர், முகமட் யுஸ்னி மாட் பியாவின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.
நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுபினருமான சாவ், நில விற்பனை மூலம் மாநில அரசு வருவாயைப் பெறுதல்; மேம்பாட்டை ஊக்குவித்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உள்ளூர் பகுதிக்கு பொருளாதார மதிப்பை மேம்படுத்தல் போன்ற இலக்குகளை கையாண்டு வருகின்றது என்று சாவ் விளக்கமளித்தார்.
“தொழில்நுட்ப ரீதியாக, மாநில அரசு நிலத்தை விற்காது. அதற்குப் பதிலாக மாநில அரசு நிலத்தை தேசிய நிலச் சட்டம் 1965 இன் விதியின் கீழ் அனுமதிக்கப்பட்ட கையகப்படுத்தல், குத்தகை அல்லது பிற குத்தகைகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
“எனவே, மாநில அரசு நில நிர்வாகத்தின் ‘நில விற்பனை’ என்ற சொல் பயன்படுத்தப்படாது,” என்று அவர் 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது தவணையின் முதல் சந்திப்புக் கூட்டத்தில் வழங்கிய தொகுப்புரையில் சாவ் இவ்வாறு தெரிவித்தார்.
நில அப்புறப்படுத்தல் விஷயங்களுக்கு, மாநில அரசு தற்போதைய நில மதிப்பீட்டை, மதிப்பீடு மற்றும் சொத்து சேவைகள் துறையின் அடிப்படையில் எடுக்கும் என்று கொன் இயோவ் கூறினார்.
இதனிடையே, அரசு நிலம் பிரதான திட்டங்களான குறிப்பாக வீடமைப்புத் திட்டம் உள்ளடக்கியிருந்தால், மாநில அரசு அந்நிலத்தை அப்புறப்படுத்துவதில் முன்மொழிவு கோரிக்கை (RFP) அணுகுமுறையைப் பயன்படுத்தும், என்றார்.
” மாநில அரசு நடப்பு நில மதிப்பை விட கூடுதலான வருவாயைப் பெற இது உதவும்” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், நிலத்தை அப்புறப்படுத்தும் முறை மாநில உடைமைகளைக் குறைக்காது அல்லது மாநில அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக மட்டுமே அல்ல. மாறாக, நில மேம்பாட்டுக்காகவும் அப்பகுதியின் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் விளக்கமளித்தார்.
“நாம் நிலத்தை மேம்படுத்தாமல் இருக்கும் அணுகுமுறையை கையாண்டால், மாநில அரசுக்குப் பராமரிப்பு நோக்கங்களுக்கான செலவுகளைச் சமாளிக்க சுமையாக இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட இடத்தின் மேம்பாட்டின் வசதிகளை மக்கள் அனுபவிக்க முடியாது,” என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.