பட்டர்வொர்த் – தமிழர்களின் மொழி, பண்பாடு, சமூக அடையாளம் ஆகியவற்றை பாதுகாக்க தமிழ்ப்பள்ளிகளும் ஆலயங்களும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்று பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
பினாங்கு மாநில உரிமைக்குரல் இயக்கத்தின் 13-ஆம் ஆண்டு கல்வி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கடந்த 13 ஆண்டுகளாக இந்த இயக்கம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதை பாராட்டத்தக்க முயற்சியாக அமைகிறது, என்றார்.

பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். ஆனால், சில தமிழ்ப்பள்ளிகள் இன்னும் சொந்த நிலம் இன்றி செயல்படுவது கவலைக்கிடமான நிலையாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இதனைத் தீர்க்கும் முயற்சியாக, வழக்கறிஞர் மங்களேஸ்வரி தலைமையில் தமிழ்ப்பள்ளிகளைச் சார்ந்த சட்டப்பூர்வ சிக்கல்கள் மாநில அரசின் சார்பில் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சில தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது, எதிர்காலத்தில் அந்தப் பள்ளிகளின் நிலைத்தன்மைக்கு சவாலாக அமையக்கூடும் என எச்சரித்த குமரன் கிருஷ்ணன், தமிழ்ப்பள்ளிகளை காப்பாற்ற வேண்டுமெனில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கல்விதான் வெற்றிக்கான திறவுகோல். ஒவ்வொரு குழந்தையும், அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், சம வாய்ப்பு கொண்ட கல்வி வாய்ப்பைப் பெறத் தகுதியானவர்கள். இந்த உன்னத முயற்சிக்கு உரிமைக் குரல் அமைப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை சட்டமன்ற உறுப்பினர் குமரன் தெரிவித்தார்.
இந்த முயற்சி தொடரும், மேலும் பல மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் என்று நம்புகிறோம். ஒன்றாகச் செயல்பட்டு, இளைய தலைமுறைக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம், என்றார்.
இந்த விழாவில், தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 100 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு உரிமைக்குரல் இயக்கத்தின் தலைவர் க. இராமன் தலைமை வகித்தார்.

தலைவரின் உரையில், இந்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக டாக்டர் சின்னையா கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது, என்றார். தமிழர் சமூகத்தின் கல்வி, நலன் மற்றும் மனிதநேய பணிகளில் ஆழ்ந்த அக்கறை கொண்டவராக அவர் விளங்குகிறார். பல ஆண்டுகளாக மாணவர் நலன், கல்வி உதவித்தொகை மற்றும் சமூக மேம்பாட்டிற்கான முயற்சிகளில் அவர் தன்னலமின்றி வழங்கி வரும் நிலைத்த ஆதரவு, சமூகத்திற்கு கிடைத்த ஒரு விலைமதிப்பற்ற வரமாகும்” என்று அவர் பாராட்டினார்.
“ஆயிரம் தலைவர்கள் வரலாம், போகலாம்; ஆனால் சமூகத்திற்கு அவர்கள் வழங்கும் நிரந்தரமான பங்களிப்பே முக்கியம்” என க. இராமன் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த கல்வி உபகரண வழங்கும் விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 9 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்றன. சமூக ஆர்வலர் திரு. மேகராஜா, வழக்கறிஞர் மங்களேஸ்வரி, தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக்குழுவின் தேசியத் தலைவர் டத்தோ கரு. இராஜமாணிக்கம், டத்தோ மரியதாஸ் கோபால், இந்து சங்க பட்டர்வொர்த் பேரவைத் தலைவர் டத்தோ சண்முகநாதன், மாநகர் மன்ற உறுப்பினர் லிங்கேஸ்வரன் சர்மா உள்ளிட்ட பல பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.