பினாங்கில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபா மையம், இந்த நவம்பரில் ஒரு முக்கிய ஆன்மீக நிகழ்ச்சியை முன்னெடுத்து, பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாளை நினைவுக்கூரும் வகையில், ஒரு மாதம் நீடிக்கும் ஆன்மீகம் சார்ந்த தொடர் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.

பக்தர்களால் “வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படும் விழா” என்று போற்றப்படும் இந்தக் கொண்டாட்டத்தில், பினாங்கில் உள்ள ஏழு சாய் மையங்களும் இணைந்து சேவை, ஆன்மீகம் மற்றும் கல்வியை வலியுறுத்தும் சமூக அடிப்படையிலான நடவடிக்கைகளை ஏற்று நடத்த இணக்கம் கொண்டுள்ளது.
பினாங்கு ஸ்ரீ சத்ய சாய் பாபா மையத் தலைவர் டாக்டர் எம்.இரத்தனவேலு, நூற்றாண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் பல மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்கள் ஒரு பொதுவான நோக்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் பகிர்ந்து கொண்டார்.

“பகவானின் பக்தர்கள் இந்த நூற்றாண்டு விழாவை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் நிகழ்ச்சியாகக் கருதுகின்றனர்.
“எங்கள் மையம், பினாங்கில் உள்ள மற்ற சாய் மையங்களுடன் இணைந்து, சமூகத்தினரிடையே அன்பு, சேவை மற்றும் ஒற்றுமையைப் பரப்புவதற்காக 2025 நவம்பர் மாதம் முழுவதும் ஒரு மாத கால கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளது,” என்று அவர் மெக்காலம் காட் வீதி, ‘Harbour Trade Centre’ இடத்தில் அமைந்துள்ள சாய் பாபா மையத்தில் முத்துச் செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கொண்டாட்டம் நவம்பர்,2 ஆம் தேதி (காலை 8.00 – மதியம் 1.00 மணி) ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 100 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகத்துடன் தொடக்க விழாக் காண்கிறது. அதோடு, நவம்பர்,9 ஆம் தேதி (காலை 9.00 – மாலை 4.00 மணி) மலேசியா அறிவியல் பல்கலைக்கழகத்தின் இண்டா கெம்பாரா அரங்கத்தில் மருத்துவ மற்றும் சேவை முகாம் நடைபெறுகிறது.
நவம்பர் 8–9 தேதிகளில், உலக அமைதி மற்றும் செழிப்புக்கான மாநில அளவிலான 24 மணி நேர ‘பஜனை’ அமர்வு சுங்கை நிபோங் மையத்தில் நடைபெறும். இது பக்தர்களை தொடர்ச்சியான மந்திரங்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்காக ஒன்றிணைக்கிறது.
நவம்பர்,16 அன்று (காலை 9.00 – மதியம் 1.00 மணி) பிறை இடைநிலைபப்பள்ளியில் நடைபெறும் சமூக சேவை நிகழ்ச்சி மற்றும் நவம்பர்,19 அன்று மகளிர் தினத்தன்று மையத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்யும் 100 ஆதரவற்ற நபர்களுக்கு உணவளிக்கும் திட்டம் ஆகியவை பிற முக்கிய நடவடிக்கைகளில் அடங்கும்.
நவம்பர் மாதம் முழுவதும், அனைத்து சாய் மையங்களிலும் காயத்ரி மந்திர உச்சாடனம், சுப்ரபாதம், நாமாவளி, நகர் சங்கீர்த்தனம் மற்றும் பஜனைகள் போன்ற தினசரி ஆன்மீக நடவடிக்கைகளை ஏற்று நடத்தும். இவை காலை 5.30 மணி முதல் SSSBC பினாங்கு மற்றும் அதன் சகோதர மையங்களான சுங்கை நிபோங் மற்றும் ரெலாவ் ஆகிய மையங்களிலும் நடைபெறும்.
ஒரு மாத காலம் நடைபெறும் இந்தக் கொண்டாட்டம் நவம்பர்,23 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு பினாங்கில் உள்ள இராமகிருஷ்ணா ஆசிரமத்தில் நடைபெறும் ஒரு பிரமாண்டமான பொது விழாவில் முடிவடையும்.
மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு தலைமையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய தினக் கொண்டாட்டத்தில் வேத மந்திரங்கள், நாடக நிகழ்ச்சிகள், பஜனைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகிய நிகழ்ச்சிகளை மனிதநேய கல்வி (EHV) குழு மாணவர்களின் பங்கேற்பில் நடைபெறும்.
மேலும், மூத்த பக்தர்களைக் கௌரவித்தல், சமூக சேவைக்காக பொது ஆளுமைகளை அங்கீகரித்தல் மற்றும் ஐந்து பொது நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்குதல் ஆகியவை அதன் சிறப்பு அம்சங்களில் அடங்கும்.
இக்கொண்டாட்டத்தை முன்னிட்டு, பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் ஆன்மீகப் பயணத்தையும் அவரது போதனைகளின் தாக்கத்தையும் குறிக்கும் 100 பக்க இதழ் வெளியிடப்படுவது பெருமைக்குரிய ஒரு சிறப்பு தருணமாகும்.
“இந்த நினைவு இதழ் பகவானின் பிறப்பு, அவதாரப் பிரகடனம் மற்றும் வாழ்க்கைப் பணி முதல் அவரது மகாசமாதி வரையிலான அவரது தெய்வீகப் பயணத்தைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், வாசகர்கள் தங்கள் ஆன்மீக முன்னேற்றத்தை உயர்த்துவதற்கான வழிகாட்டியாகவும் செயல்படும்.
ஏழு ஆண்டுகள் தலைவராகவும், 2023 முதல் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வரும் இரத்தனவேலு, வெறும் சடங்குகளுக்கு அப்பால் இந்தக் கொண்டாட்டங்கள் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளன என்றும், ‘மக்கள் சேவை மகேசன் சேவை’ என்ற அமைப்பின் காலத்தால் அழியாத கொள்கையை அவை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன என்றும் கூறினார்.
சாய் இயக்கத்தின் செயல்பாடுகளில் இளைஞர்களும் கல்விப் பிரிவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று டாக்டர் இரத்தனவேலு கூறினார். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் மையத்தின் மனிதநேய கல்வி (EHV) நடவடிக்கையானது ஒழுக்கம், ஆன்மீகம் மற்றும் சேவை ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பாடங்கள் மூலம் பல இளைஞர்களை வளர்ச்சி காண ஊக்குவிக்கிறது.
“இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு எங்கள் அமைப்பின் முதுகெலும்பாக திகழ்கின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
பினாங்கு மையம் வழக்கமான வாராந்திர அமர்வுகளையும் நடத்துகிறது. அவ்வகையில் செவ்வாய்க்கிழமை தபேலா வகுப்பு (இரவு 7.30 – 8.00 மணி); புதன்கிழமை பரதநாட்டியம் (இரவு 7.00 – 8.00 மணி), வியாழக்கிழமை காயத்ரி மந்திரம் (இரவு 8.00 மணி), மற்றும் மனிதநேய வகுப்புகளுக்குப் பிறகு ஒவ்வொரு சனிக்கிழமையும் (இரவு 7.15 மணி முதல்) பஜனை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உலக சத்ய சாய் மிஷன கீழ் செயல்படும் மலேசியாவில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் அமைப்பு, இன மத பேதமின்றி அனைவரையும் வரவேற்கிறது.
பினாங்கில் உள்ள ஏழு மையங்கள் ஒன்றிணைந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வருகையுடன், வரவிருக்கும் நூற்றாண்டு விழா நீடித்த நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்திற்கு ஒரு சான்றாக அமையும்.
“இந்த மகிழ்ச்சியான பயணத்தில் எங்களுடன் இணைய பொதுமக்களை நாங்கள் அழைக்கிறோம்.
“பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா உலகத்துடன் பகிர்ந்து கொள்ள நமக்குக் கற்றுக் கொடுத்த அமைதி, மகிழ்ச்சி மற்றும் தெய்வீக பேரின்பத்தை கலந்துகொள்ளும் அனைவரும் அனுபவிக்கட்டும்,” என்று டாக்டர் இரத்தனவேலு கேட்டுக் கொண்டார்.
படம் 1: பினாங்கு ஸ்ரீ சத்ய சாய் பாபா மையத் தலைவர் டாக்டர் எம்.இரத்தனவேலு மற்றும் நிர்வாகத்தினர் குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.
படம் 2: பக்தர்களின் வழிபாட்டிற்கு பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.
படம் 3: பினாங்கு ஸ்ரீ சத்ய சாய் பாபா மையத்திற்கு பக்தர்கள் ஆன்மீக வழிபாட்டில் கலந்து கொள்வதைப் படத்தில் காணலாம்.