இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடம்  21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலுக்குச் சான்றாகத் திகழ்கிறது

இப்புதிய கட்டட திறப்பு விழாவை மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி ரிபன் வெட்டி தொடக்க விழா பலகையில் கையொப்பமிட்டார்.

ஜார்ச்டவுன் – இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக அறிவியல் போட்டிகளில் வெற்றிப்பெற்று தமிழ்ப்பள்ளிகளும் பிற ஆரம்பப்பள்ளியைப் போல தரமானது என நிரூபித்துள்ளனர். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் அனைத்து பாடங்களில் ‘ஏ’ எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அனைத்து மாணவர்களின் யூ.பி.எஸ்.ஆர் தேர்வின் சராசரி தேர்ச்சி விகிதம் உயர் காண்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,” என மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.

மகிழ்ச்சியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

பினாங்கில் முதல் தமிழ் தேசிய இடைநிலைப்பள்ளி கட்டப்படும் என  நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். அதன் தொடக்க நடவடிக்கையாக தமிழ்க்கல்வி தேசிய மாநாட்டில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூடிய விரைவில் கல்வி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழாவை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த பேராசிரியர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்புதிய கட்டட திறப்பு விழாவை மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி ரிபன் வெட்டி,  தொடக்க விழா பலகையில் கையொப்பமிட்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மாநில அரசு  தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வழங்கப்படும் வருடாந்திர மானிமும் ரிம1.75 மில்லியனிலிருந்து ரிம2.0 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பாலர்பள்ளிக்கு (ரிம150,000), தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதியம் ( ரிம150,000) என கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என மேலும் எடுத்துரைத்தார். மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்கள் மட்டுமின்றி நிலங்களும் வழங்கி தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துகிறது. அண்மையில் ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்தில் இராஜாஜி தமிழ்ப்பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் வழங்க ஒப்புதல் வழங்கியதையும் அகம் மகிழத் தெரிவித்தார்.

இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்தின் அனைத்து   வகுப்புகளிலும் விவேகத் தொழில்நுட்பப் பலகைகளும் மற்றும் 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. இப்பள்ளியில்25 ஆசிரியர்களின் வழிகாட்டலில் 276 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். தொடக்கத்தில் கட்டட மேம்பாட்டுப் பணிகள் காரணமாக பல ஆண்டுகளாக மாணவர்கள்   கொள்கலனை(Container) வகுப்பறையாகப் பயன்படுத்தினர் என்பதை மறக்க இயலாது. 2015-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா தொடங்கப்பட்டு ஜூலை,3 2017-ஆம் ஆண்டு முதல் பள்ளி புதியக் கட்டடத்தில் முறையாகச் செயல்படத் துவங்கியது.

இந்நிகழ்வில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர், மாநில கல்வி துணை இயக்குநர் அப்துல் ரஷிட் பின் அப்துல் சமாட், மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புப் பணிக்குழுத் தலைவர்  டத்தோ அன்பழகன், இராமகிருஷ்ணா ஆசிரமத் துணை தலைவரும் பள்ளி நிர்வாக வாரியக்குழுத் தலைவருமான திரு இராமசாமி, தலைமையாசிரியர் திருமதி புவனேஸ்வரி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திரு தர்மன்

தமிழ்ப்பள்ளிகளும் தொழில்நுட்பவளர்ச்சியில் வெற்றிநடைப்போடும் பொருட்டு 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் வகுப்பறை(ஆண்டு 2 வள்ளுவர்)  தயார் செய்வதற்கு நிதியுதவி வழங்கியதாக திரு பிரேம் குமார் தெரிவித்தார். ‘நம் சமுதாயத்தை நாம் தான் வளர்க்க வேண்டும், இதன் மூலம் எதிர்காலத்தில் நம் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் அனைத்து வசதிகளுடன்  படிக்க இயலும்,’ என்றார்.

சிறியப் பள்ளியாக இருந்த இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிப்பதில் மகிழ்ச்சி.  அதுமட்டுமின்றி இப்பள்ளியில் சமயம் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள மலேசிய இந்து சங்கம் என்றும் துணை நிற்கும் என புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் தலைவர்  திரு தர்மன் தெரிவித்தார்.

திரு பிரேம் குமார்

1986-ஆண்டு சிறிய மண்டபமாக இருந்த இப்பள்ளியின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சிக்கொள்வதாக அதன் முன்னால் மாணவர் திரு அமுதன் தெரிவித்தார். நம் பிள்ளைகளை கட்டாயமாக தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி தாய்மொழி கற்க  வேண்டும் என மேலும் வலியுறுத்தினார். இப்பள்ளிக்கு அச்சிடும் பொருட்கள் வழங்கி ஆதரவு நல்கியதாகக் கூறினார்