ஜார்ச்டவுன் – மாநில அரசு, 2027-ஆம் ஆண்டில் பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகம் (PYDC) மற்றும் பினாங்கு இளைஞர் குழு (JBPP) ஆகியவற்றின் மூலம் இளைஞர் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தலை வலுப்படுத்துவதற்காக ரிம2.8 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகையில், இத்தொகையில் ரிம1.5 மில்லியன் PYDC அமைப்பிற்கும், ரிம1.3 மில்லியன் JBPP அமைப்பிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த இரு அமைப்புகளும் இளைஞர்களின் ஆற்றலையும் திறன்களையும் மேம்படுத்துவதில் மாநில அரசின் முக்கியப் பங்காளிகளாகச் செயல்படுவதை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
“தற்போது JBPP அமைப்பில் 384 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனுடன், 10,976 இளைஞர் தன்னார்வலர்களும் மாநிலத்தின் இளைஞர் மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தீவிரமாகப் பங்காற்றி வருகின்றனர்.
“அதேவேளையில், மாநில விளையாட்டுத் துறையின் மேம்பாடு மற்றும் விளையாட்டு வீரர்களின் திறன்களை வளர்ப்பதற்காக, பினாங்கு மாநில விளையாட்டு மன்றத்திற்கு (MSNPP) ரிம7.15 மில்லியனும், விளையாட்டு வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பினாங்கு விளையாட்டு அரங்குகள் மற்றும் திறந்தவெளி வசதிகள் கழகத்திற்கு (PSDKLPP) ரிம5 மில்லியனும் ஒதுக்கப்படும்,” என்றார்.
பினாங்கு மாநில சட்டமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியான சீ விளையாட்டுப் போட்டியின் நான்கு முக்கிய போட்டி மையங்களில் ஒன்றாகப் பினாங்கு இடம்பெறவுள்ளதாகவும், ஏனைய போட்டி மையங்களாக கோலாலம்பூர், ஜோகூர் மற்றும் சரவாக் ஆகியவை விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இப்போட்டிகள் 2027 செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளன.
“பினாங்கில் செபாக் தக்ரா, ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ், ஜூடோ, குத்துச்சண்டை, மேசைப்பந்து, ஃபுளோர்பால் ஆகிய ஆறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
“இப்போட்டிகளைச் சிறப்பாக நடத்துவதற்காக, 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளில் கட்டம் கட்டமாக பினாங்கு மாநில விளையாட்டு மன்றத்திற்கு வழங்கும் வகையில் மாநில அரசு ரிம15 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
“பினாங்கு போட்டி மையத்திற்கான ஏற்பாடுகள், குறிப்பாகப் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் தொடர்பான பணிகள் தற்போது 90 விழுக்காடு நிறைவடைந்துள்ளன. இதில் ஸ்பாய்ஸ் அரேனா மற்றும் பினாங்கு வாட்டர்பிரோன் மாநாட்டு மையம் (PWCC) ஆகியவையும் அடங்கும்,” என பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான சாவ் தெரிவித்தார்.
இதற்கிடையில், மக்களுக்கான சுகாதாரச் சேவைகளின் அணுகல் மற்றும் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுகாதாரத் துறைக்கும் மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
2027-ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், பினாங்கு பொது மருத்துவமனையில் ரிம32.29 மில்லியன் செலவில் புதிய குருத்தணு சேவை மையக் கட்டடம் (Pusat Perkhidmatan Stem Sel), நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டம் 2027 ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், ரிம247.65 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான புதிய கட்டடம் 2027 செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இம்முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், 2027-ஆம் ஆண்டில் சுகாதாரத்திற்கான மாநில ஆட்சிக்குழுவிற்கு ரிம213,000 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி, அரசு சாரா அமைப்புகள் முன்னெடுக்கும் சுகாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளுக்குத் துணைபுரிவதுடன், பினாங்கு மக்களின் நல்வாழ்வையும் சுகாதார நிலையையும் மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்,” என நிதி, பொருளாதார மேம்பாடு, நிலம் மற்றும் தொடர்புத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கொன் இயோவ் கூறினார்.
இதனிடையே, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்முனைவோர் துறையின் வளர்ச்சிக்கும் மாநில அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது.
அந்த வகையில், டிஜிட்டல் பினாங்கு அமைப்பின் வாயிலாகவும், 2025–2030 பினாங்கு டிஜிட்டல் பொருளாதாரப் பெருந்திட்டத்தின் (DEMP) மூலமாகவும் மாநிலத்தின் டிஜிட்டல் மேம்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த 2027-ஆம் ஆண்டில் ரிம4.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் விளக்கிய சாவ் கொன் இயோவ், DEMP திட்டத்தின் கீழ் டிஜிட்டல் பினாங்கு முன்னெடுத்து வரும் பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக இதுவரை சுமார் 8,646 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (PMKS) பயனடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
“இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிலவரப்படி, பினாங்கில் 330 புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை சுமார் ரிம118 மில்லியன் வருவாயை ஈட்டியுள்ளதுடன், ஏறத்தாழ 1,720 வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன.
“தொழில்நுட்பப் புத்தாக்க நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் வளர்ப்பு, உயர் தொழில்நுட்பப் பொருட்களின் மேம்பாடு, சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
“மேலும், DahDigital, MyKADUN ஆகிய திட்டங்களுடன், மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களில் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.
“இணைய இணைப்பைப் பொறுத்தவரை, 2026 அக்டோபர் மாத நிலவரப்படி, பினாங்கில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 4G வலையமைப்பின் சேவை 100 விழுக்காட்டை எட்டியுள்ளது. அதேவேளையில், 5G வலையமைப்பின் சேவை 91.9 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.
“அனைத்துத் தரப்பினரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்களை முழுமையாகப் பெற்றிடும் வகையில், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் அதற்கான சூழலமைப்பை மாநில அரசு தொடர்ந்து வலுப்படுத்தும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.