ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் உள்ள எட்டு தமிழ்ப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட வாய்மொழிக் கேள்விக்குப் பதிலளித்த அவர், பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியையும் உறுதிப்படுத்த மாநில அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.
அதன்படி, வகுப்பறைகள், கழிப்பறைகள், சிற்றுண்டிச்சாலைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் டிஜிட்டல் வசதிகள் உள்ளிட்ட பள்ளிகளின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்ப்பள்ளிகளின் நில உரிமை தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதும் மாநில அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டு மாநில அரசும் தனியார் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து, வட செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள மலாக்கோஃப் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்காக நான்கு ஏக்கர் நிலத்தை ஒப்படைத்தன.
அதேவேளையில், 2026ஆம் ஆண்டு இராஜாஜி தமிழ்ப்பள்ளியை 2.638 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள புதிய இடத்திற்கு மாற்றுவதற்கான கட்டட நிர்மாணப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இதுதவிர, மேலும் ஐந்து தமிழ்ப்பள்ளிகளின் நில உரிமை தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், தமிழ்ப்பள்ளிகளில் டிஜிட்டல் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில் மேக்கர்ஸ் லேப், டிஜிட்டல் ஆய்வகம் மற்றும் கணினி ஆய்வகங்களை அமைப்பதற்கும் மாநில அரசு ஆதரவு வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 2026ஆம் ஆண்டு பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மொத்தம் 130 டேப்லெட்டுகளை வழங்கும் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதுடன், கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் விரிவுபடுத்தப்படும், என்றார்.
இதனிடையே, மாணவர் சேர்க்கை குறைந்து வரும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலச் செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இதில், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், மக்கள் தொகைப் பரவல், குடியிருப்புப் பகுதிகளின் வளர்ச்சி, போக்குவரத்து வசதிகள் மற்றும் எதிர்கால மாணவர் சேர்க்கைக்கான வாய்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளிகளைப் புதிய இடங்களுக்கு மாற்றும் திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில், பைரம் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய இடத்திற்கு மாற்றப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் முதல் முழுமையாகச் செயல்பட்டு வருகிறது.
அதேபோல், சாங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் புதிய இடத்திற்கு மாற்றுவதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதற்குப் பொருத்தமான நிலத்தை அடையாளம் காணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மேலும், பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியில் நான்கு ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அங்கு பினாங்கின் 29ஆவது தமிழ்ப்பள்ளியை அமைப்பதற்கான முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதைத் தடுப்பதற்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, மக்கள் தொகை மாற்றங்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் கல்வித் தேவைகளைக் கருத்தில் கொண்டு நீண்டகாலத் திட்டங்களை வகுப்பதும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மாநிலக் கல்வித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து, தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்காலத் தலைமுறையினருக்குத் தரமான கல்வியை வழங்குவதற்கும் மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.