உள்ளூர் வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் மாநில அரசு நடவடிக்கைக்கு MICCI ஆதரவு

Admin
img 20250723 wa0008

ஜார்ச்டவுன் – இந்திய பண்டிகை அல்லது விற்பனை விழாக்களில் வெளிமாநில வர்த்தகர்கள் பங்கேற்பதை சீர்ப்படுத்தும் மாநில அரசின் முடிவை மலேசிய இந்தியர் வர்த்தகம் மற்றும் தொழிலியல் சங்கம் (MICCI) பினாங்கு கிளை வரவேற்கிறது.

img 20250723 wa0003
மலேசிய இந்தியர் வர்த்தகம் மற்றும் தொழிலியல் சங்கம் (MICCI) பினாங்கு கிளை தலைவர் எஸ்.பார்த்திபன்.

அண்மையில் (ஜூலை,21) அன்று செய்தியாளர் சந்திப்பின் போது முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து MICCI சங்கம் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கின்றனர்.
“உள்ளூர் இந்திய வணிகங்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, உச்ச நேரங்களில் இந்திய கண்காட்சிகள், விழாக்கள் அல்லது கார்னிவல்களை ஏற்பாடு செய்வதற்கு வெளிமாநில வணிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை,” என்று மாநில முதலமைச்சர் சாவ் குறிப்பிட்டார்.

பினாங்கிற்கு வெளியே இருந்து வரும் வர்த்தகர்கள் இம்மாநிலத்தில் வியாபாரம் செய்ய தடை செய்யவில்லை, மாறாக ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் மட்டுமே இந்தியர் தொடர்பான விற்பனை விழாக்களை ஏற்று நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

இதற்குப் பதிலளித்த பினாங்கு MICCI தலைவர் டத்தோ எஸ். பார்த்திபன், உள்ளூர் இந்திய வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அமலாக்கம் காண்பது அவசியம் என்று தெரிவித்தார். ஏனெனில், அவர்களில் பலர் தீபாவளி விற்பனை போன்ற பண்டிகை விழாக்களை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.

“லிட்டில் இந்தியாவில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பெருநிலத்தில் உள்ள வர்த்தகர்கள் சார்பாக நாங்கள் குரல் எழுப்புகிறோம். இந்த சவாலான பொருளாதார காலங்களில், இந்தக் கொள்கை எங்கள் உள்ளூர் வர்த்தகர்களுக்கு மிகவும் அவசியமான ஆதரவை வழங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.

“இதை செயல்படுத்தியதற்காக முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

img 20250723 wa0001
மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்க (MAICCI) தலைவர் டத்தோ ஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் கூறினார்.

நேற்று (ஜூலை,22) லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பார்த்திபன் இதைப் பகிர்ந்து கொண்டார். இந்த ஒழுங்குமுறையை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்புக் கூட்டம் MICCI உறுப்பினர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இதற்கிடையில், பினாங்கு MICCI, மாநிலத்திற்கு வெளியே உள்ள வர்த்தகர்கள் உள்ளூர் வணிகங்களின் வருமானத்தைப் பாதிக்கிறார்கள் என்ற கவலையை எழுப்பிய பின்னர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது என்று மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்க (MAICCI) தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் கூறினார்.