ஐந்து மாவட்டங்களிலும் சிறந்த விளையாட்டாளர்கள் உருவாக்க பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும் – சூன் லிப் சீ

பத்து காவான் – இளைஞர் & விளையாட்டு ஆட்சிக்குழு மற்றும் பினாங்கு பொழுதுபோக்கு வளாகம் & அரங்க வாரியம் இணை ஏற்பாட்டில்
விளையாட்டு அனைவருக்குமானது @ பினாங்கு விளையாட்டு அரங்கம் எனும் போட்டி நடைபெறவுள்ளது.

இத்திட்டம் பொது மக்களிடையே சுகாதாரம், பேணுதல்;விளையாட்டு துறையில் ஊக்குவித்தல்; சுறுசுறுப்பாக செயல்படுதல் மற்றும் நல்லொழுக்கம் பின்பற்றுதல் ஆகியவை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ கூறினார்.

“இந்த போட்டியில் 12 வயது முதல் பெரியவர்கள் வரை பங்கேற்பதன் மூலம் பொது மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் அவர்களின் ஆர்வம் மேலோங்கும். அதுமட்டுமன்றி, விளையாட்டு அரங்கத்தில் கால் தடம் பதித்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற பலரின் கணவு மெம்ப்பிக்கப்படும்,” என சூன் தெரிவித்தார்.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் பங்கேற்பாளர்கள் 2×200மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் , நீளம் தாண்டுதல் மற்றும் தடை தாண்டுதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு புகைப்படம் எடுக்க வேண்டும். பங்கேற்பாளர்கள் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒரு சுலோகம் தயாரித்து முகநூலில் ‘hashtag’ செய்து பதிவு செய்ய வேண்டும். பங்கேற்பாளர்கள் #ThinkLocalActGlobal, #SportsForAll மற்றும் சுயமாக தயாரித்த சுலோகத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இப்போட்டியில் கலந்து கொள்ள பங்கேற்பாளர்கள் வருகின்ற 14 செப்டம்பர் முதல் 23 செப்டம்பர் மாதத்திற்குள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSet4ERtz-t1eNfxWVjZYJGZ6X6E6mCCq9sWpVrHyxa-Kfp3pA/viewform எனும் அகப்பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். பங்கேற்பாளர்கள் 12 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும் . ரிம10-ஐ பதிவுக் கட்டணமாக செலுத்தி வருகின்ற 23 செப்டம்பர் முதல் 23 அக்டோபர் மாதத்திற்குள் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை இப்போட்டியில் பங்கேற்று முகநூலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சிறந்த மூன்று சுலோகத்துடன் கூடிய புகைப்படங்களுக்கு தலா ரிம100 ரொக்கப்பணம் வழங்கப்படும். அதுமட்டுமன்றி, அதிஷ்ட குழுக்கள் வாயிலாக பல சிறப்பு பரிசுகளும் தட்டிச் செல்லலாம்.

இந்நிகழ்ச்சியில் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கூய் சூன் ஐக் கலந்து கொண்டார்.

தற்போது மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருப்பதால் பங்கேற்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) பின்பற்றுவது அவசியம்.

மேலும், தற்போது தென் செபராங் பிறை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களே அதிகமாக தடகள போட்டிகள் குறிப்பாக ஓட்டப்பந்தயத்தில் ஈடுப்படுகின்றனர். எனவே, பினாங்கு மாநிலத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் விளையாட்டுத் துறையில் கலந்து கொள்ள மாநில விளையாட்டு கவுன்சில் (எம். எஸ்.என்) மற்றும் பினாங்கு அமரேச்சர் சங்கத்துடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கூடிய விரைவில் பயிற்சி பட்டறைகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.


“கூடிய விரைவில் இப்பயிற்சி பட்டறைகள் தொடங்க வேண்டும். ஏனெனில், ஒரு சிறந்த விளையாட்டாளரை உருவாக்க இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் தேவைப்படும்,” என்றார்.