கடல்வழி சுரங்கபாதை திட்டத்திற்கு மாநில அரசு ஒரு சென் கூட கட்டவில்லை – மாநில முதல்வர்.

பினாங்கு மாநில அரசு இதுவரை கடல்வழி சுரங்கபாதை திட்டத்திற்கு அதன் குத்தையாளரான செனித் பியூசிஜி தனியார் நிறுவனத்திற்கு ஒரு சென் கூட செலவிடவில்லை என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.

மாநில முதல்வர் சில பொறுப்பற்ற நாளிதழ்களில் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையை கடுமையாக சாடினார். கடல்வழி சுரங்கபாதை திட்டத்திற்கான வடிவமைப்பு ஆய்வறிக்கை 92% நிறைவுப்பெற்றுள்ள வேளையில் இதுவரை மாநில அரசு அதற்காக கட்டணம் எதுவும் செலுத்தவில்லை என்பது உண்மையான கூற்று என விளக்கமளித்தார் .

மாநில அரசு செனித் பியூசிஜி தனியார் நிறுவனத்திற்கு மற்ற மூன்று நெடுஞ்சாலைகளின் நிர்மாணிப்புக்காக மட்டுமே இதுவரை கட்டணம் வழங்கியுள்ளது;, அதேவேளையில் கடல்வழி சுரங்கபாதை திட்டத்திற்கு இன்னும் வழங்கப்படவில்லை“, என தெளிவுப்படுத்தினார் . மாநில அரசு அங்கீகரித்துள்ள விரிவான சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு அறிக்கை மூன்று நெடுஞ்சாலை நிர்மாணிப்புக்காக மட்டுமே, இந்த அறிக்கையின் மூலம் இந்த நெடுஞ்சாலை நிர்மாணிப்புப் பணிகள் தொடங்கப்படலாம் என செய்தியாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங்.

மாநில ஊழல் தடுப்பு ஆணையத்திடம் மாநில அரசு சிறந்த ஒத்துழைப்பினை நல்கும் எனவும் தமது நிர்வாகம் அனைத்து ஆவணங்களையும் முறையே கொண்டிருக்கும் வேளையில் தாம் எதற்கும் ஐயப்படவில்லை என குறிப்பிட்டார். திறந்த குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் பினாங்கு மாநில அரசு அதிகமான வதந்திகளை எதிர்கொள்ளும் வேளையில் திறந்த குத்தகை முறையை அமல்படுத்தாமல் இருக்கும் அரசு இயக்கங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை பற்றி கேள்வி எழுப்பினார் மாநில முதல்வர்.