சமயம் மற்றும் கலாச்சார வகுப்பு மாணவர்களை நெறிப்படுத்தும்

Admin

ஜார்ஜ்டவுன் – ” ஒரு சமயத்தின் மகத்துவத்தை அறிந்து  முறையாக கடைப்பிடிக்கும் மாணவன் சுய ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவம் கொண்ட தலைவனாகத் திகழ்வான். சமயம் மற்றும் கலாச்சாரத்தைக்  கற்கும் மாணவர்கள் வாழ்க்கையில் தீய வழியில் செல்லாமல் நல்வழியைத் தேர்ந்தெடுத்து சிறந்த எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பர்,” என புக்கிட் பெண்டேரா இந்து சங்கப் பேரவையின் தலைவர் விவேக நாயகன் தர்மன் மை மாணவர்‘ (MyManavar) திட்டத்தில் கலந்து கொண்டு  வரவேற்புரை வழங்கும் போது இவ்வாறு கூறினார்

புக்கிட் பெண்டேரா இந்து சங்க பேரவை ஏற்பாட்டில் மை மாணவர்எனும் சமயமும் கலாச்சார வகுப்பு திட்டம் ஜூன் மாதம் 15-ஆம் நாள் தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமை காலை மணி  8.30 முதல் 11.00 மணி வரை இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் இனிதே நடைபெறுகிறது. இத்திட்டத்தில் 7 முதல் 15 வயது மதிக்கத்தக்க இந்து மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதுவரை 90 மாணவர்கள் இத்திட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

மை மாணவர்திட்டம் சமயப் போதனை, அறிவியல் முறையில் நிரூபிக்கப்பட்ட நமது இந்து சமயக் கூறுகளுக்கான  விளக்கம் அளித்தல் மற்றும் கலை சார்ந்த நடவடிக்கைகள் என மூன்று பிரிவுவாக வழிநடத்தப்படுகிறது.

கடந்து மூன்று வாரங்களாக நடத்தப்படும் இத்திட்டத்தில் மாணவர்கள் ஓம் மந்திரம், ஆலய வழிப்பாடு, விநாயகர் மந்திரம், தோரணம் பின்னுதல், கபடி விளையாட்டுப் போட்டி என சமயமும் கலையும் சிறப்பாக கற்றுக்கொண்டு பயன்பெறுகின்றனர்,” என தர்மன் மேலும் தெரிவித்தார்.  முற்றிலும் இலவசமாக நடைபெறும் இத்திட்டத்தில் இன்னும் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்வதற்குப் பெற்றோர்கள் ஊக்கமளிக்க வேண்டும்.

இந்நிகழ்வில் புக்கிட் பெண்டேரா கல்விப்பிரிவுத் தலைவர் ஹரிடாஸ், பினாங்கு மாநில கபடி குழு பிரதிநிதி அர்ஜூனன், தொண்டர் மணி இராமா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  

மை மாணவர் திட்டத்தில் மாணவர்களுக்குச் சுய ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பது மட்டுமின்றி  கல்வியில் கவனத்தையும் ஆர்வத்தையும் தூண்டுதல், நேர நிர்வகிப்பு கற்பித்தல், தியானத்தின் வழி ஞாபக சக்தி பெறுதல் என அனைத்து கூறுகளையும் கற்பிக்கப்படும்