ஜெலுத்தோங் குப்பைக் கிடங்கு திட்டம்: EIA இணக்கத்திற்கு முன்னுரிமை – முதலமைச்சர்

Admin
img 20260514 wa0150

ஜார்ச்டவுன் – ஜெலுத்தோங் குப்பைக் கிடங்குத் திட்டம் (TPSJ) பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் அதிகாரிகள் நிர்ணயித்த தொழில்நுட்ப நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு முறையாக செயல்படுத்தப்படுவதை மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.

முதலமைச்சர் மேதகு சௌ கோன் இயோவ் கூறுகையில், குறித்த திட்டம் 2017ஆம் ஆண்டில் பி.எல்.பி. இன்ஜினியரிங் பெர்ஹாட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (PDC) மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்தில் (JDA) கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார்.

“இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க PDC திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளது. இதுவரை திட்ட மேம்பாட்டாளரிடமிருந்து ரிம5 மில்லியன் அளவிலான திட்ட மேலாண்மை கட்டணத்தைப் பெற்றுள்ளது.

“மாநில அரசு TPSJ பகுதியில் தற்போது நிலவும் தீ விபத்து அபாயம், வாயு வெளியேற்றம், ‘leachate’ மற்றும் குப்பை மேடு அமைப்பின் நிலைத்தன்மை குறைபாடு போன்ற பாதுகாப்பு மற்றும் மாசுபாடு பிரச்சனைகளை சமாளிக்க இந்தத் திட்டம் முக்கியமானது என கருதுகிறது,” என்று அவர் இன்று நடைபெற்ற 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் நான்காவது தவணை முதல் கூட்டத்தின் தொகுப்புரையில் சாவ் தெரிவித்தார்.

மேலும் விளக்கமளித்த அவர், திட்ட கால அவகாச நீட்டிப்பு (EOT) தொடர்பான பரிசீலனை, திட்ட மேம்பாட்டாளரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணிகளை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டதாகவும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA) தொடர்பாக சுற்றுச்சூழல் துறை விதித்த கூடுதல் தொழில்நுட்ப தேவைகள் மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறினார்.

“EIA ஒப்புதல் இன்னும் பெறப்படாதது என்பது மாநில அரசால் மிகவும் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

“எனவே, இந்தத் திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக எந்த முடிவும் எடுப்பதற்கு முன், PDC வழங்கும் அறிக்கையை மாநில அரசு ஆராயும்,” என்றார்.

மாநில அரசின் PDC-க்கு உள்ள கடன் தொடர்பாக, கடந்த 2025 மே மாத சட்டமன்ற கூட்டத்தில் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளதாக சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

“இது மாநில அரசு மற்றும் PDC இடையிலான பாயான் முத்தியாரா மேம்பாட்டு திட்ட வருவாய் பகிர்வு தொடர்பானது.

“இந்த ரிம1.07 பில்லியன் மதிப்பிலான திட்ட வருவாய் 2012 முதல் 2018 வரை மாநில அரசின் வருவாய் கணக்கில் சேர்க்கப்பட்டது.

“அந்தத் திட்ட வருவாயில் ஒரு பகுதி, வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டம் செயல்படுத்துவதற்காக மீண்டும் PDC-க்கு வழங்கப்பட்டது.

“2025 ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு (MMKN) கூட்ட ஆவணத்தில், ரிம494.4 மில்லியன் தொகையை வழங்குவதற்கான முன்மொழிவை PDC சமர்ப்பித்தது,” என்றும் அவர் கூறினார்.

பைராம் தோட்ட தொடர்பான முன்மொழிவுக்கான கோரிக்கை(RFP) குறித்து பேசுகையில், PDC நிறுவனம் RFP சலுகையைத் தொடராமல் இருந்தது வெறும் சலுகை மதிப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அல்ல என்றும், நிர்வாகம், சட்ட அபாயங்கள், நீண்டகால நலன் மற்றும் மாநிலத்தின் மூலோபாய சொத்துக்களை பாதுகாப்பது போன்ற அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டதாகவும் சாவ் விளக்கமளித்தார்.

மாறாக, PDC நிறுவனம் அனைத்து நிபந்தனைகள், நிதி தாக்கங்கள் மற்றும் முக்கிய RFP விதிமுறைகளின் இணக்கத்தன்மையையும் முழுமையாக பரிசீலித்ததாக அவர் கூறினார்.

“கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்தபடி, IJM-Aspen நிறுவனத்தின் RFP 2024 திறந்த குத்தகை தொடரப்படவில்லை. ஏனெனில், அந்த நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்பது முக்கிய நிபந்தனைகளில் ஐந்தை பின்பற்றத் தவறியது. மேலும், PDC மீது கூடுதல் செலவுச் சுமையை ஏற்படுத்தும் பல கூடுதல் நிபந்தனைகளையும் விதித்தது.

“எனவே, IJM-Aspen நிறுவனம் RFP 2024 விதிமுறைகளை பின்பற்றத் தவறியதன் அடிப்படையில், PDC நிறுவனம் RFP 2025க்காக புதிய திறந்த குத்தகையை அறிவித்தது.

“ஆனால், RFP 2025யும் தொடரப்படவில்லை. முக்கிய குத்தகை நிபந்தனைகளில் சில மாற்றங்கள் பின்பற்றப்படாததுடன், குத்தகை நிறுவனங்களின் கூடுதல் கோரிக்கைகளும் இருந்தன,” என்று மேலும் அவர் தெரிவித்தார்.