டிஜிட்டல் கல்வி வலுப்பெற அஸாத் தமிழ்ப்பள்ளியில் புதிய கணினி மையம்

Admin
fb img 1776397379266

ஜார்ச்டவுன் – வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு அஸாத் தமிழ்ப்பள்ளியில் கணினி மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

“நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கணினி மையம் திகழ்கிறது.

fb img 1776397391900

“இந்த புதிய கணினி மையம், மாணவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு வளங்கள் மற்றும் சமீபத்திய உலகளாவிய தகவல்களை எளிதில் அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம், மாணவர்களின் வாசிப்பு ஆர்வம் மேம்படுவதுடன், எண்ணிமக் கல்வித் திறன்கள் மற்றும் திறனாய்வுச் சிந்தனையும் வளர்க்கப்படுகிறது.

“இந்த முன்னெடுப்பு, 21ஆம் நூற்றாண்டுக்கேற்ற ஆற்றல்மிக்க மற்றும் பயனுள்ள கற்றல் முறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வழிவகுக்கும்,” என சுந்தராஜு கூறினார்.
img 20260415 wa0074

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில், இந்த ஆண்டு பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரிம2.42 மில்லியன் ஒதுக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஒதுக்கீடு, அஸாத் தமிழ்ப்பள்ளியில் செயல்படுத்தப்பட்ட கணினி மையத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் கற்றல் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சிகளை உள்ளடக்கியதாகும், என்றார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கோமகன்; அஸாத் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்ரித்தா மற்றும் பெற்ரோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

எல்.பி.எஸ். துணைத் தலைவரும் இத்திட்டத் தலைவருமான தர்மன் தலைமையில், கணினி மையத் திட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப வசதிகள், அமைப்புப் பணிகள் மற்றும் கொள்முதல்கள் முறையாக மேற்கொள்ளப்பட்டதால், திட்டம் சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளது பாராட்டக்குரியச் செயலாகும்.

தொழில்நுட்பத்தின் மூலம் கல்வியை மேம்படுத்துவதில் அனைவரும் இணைந்து செயல்படுவோம். கல்வி மற்றும் புத்தாக்கம் மூலம் நமது பிள்ளைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து செயல்பட வேண்டும் என தர்மன் வலியுறுத்தினார்.

இவ்விழாவின் போது, மாண்புமிகு டத்தோ ஸ்ரீ சுந்தரஜூ அவர்கள், டிஜிட்டல் கல்வியை மேம்படுத்துவதில் தனது வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், மாணவர்களின் பயன்பாட்டிற்காக கூடுதலாக 10 டேப்லெட்டுகளை வழங்கி தனது ஆதரவை மேலும் வலுப்படுத்தினார்.