தாமான் ப்ஃரி ஸ்கூல் பராமரிப்புத் திட்டம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் – ஜெக்டிப்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு இந்த ஆண்டு தாமான் ப்ஃரி ஸ்கூல் வீடமைப்புத் திட்டத்தை மேம்படுத்த  ரிம500,000-ஐ ஒதுக்கியுள்ளது என்று மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி, கிராமம் மற்றும் நகர்ப்புற  திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ  தெரிவித்தார். 

இந்த பராமரிப்புத் திட்டத்தில்  குப்பை சேகரிப்பு இட வசதி மேம்படுத்துதல்; பொது மண்டபத்தின் கூரை மாற்றுதல்; பழைய  நீர் விநியோக குழாய்கள் மாற்றுதல் (பிளாக் கே.டி, கே.இ, கே.எஃப், கே.ஜி, கே.எச், மற்றும் கே.ஜே)  மற்றும் சேதமடைந்த கதவுகள் மாற்றுதல்  ஆகியவை இதில் அடங்கும் என்று கூறினார்.

“இந்த பராமரிப்புப் பணிகள் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாக, இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் கூறினார். 

மாநில அரசு கடந்த 2018 முதல் 2020-ஆம் ஆண்டு வரை தாமான் ப்ஃரி ஸ்கூல் பள்ளி வீடமைப்புத் திட்டத்தை பராமரிக்கவும் மேம்படுத்தவும் ரிம489,690.27-ஐ செலவிட்டுள்ளது என ஜெக்டிப் தெரிவித்தார். 

“பினாங்கில் உள்ள அனைத்து பிரிவு வீடமைப்புத் திட்டங்களுக்கும் உதவுவது எங்கள் உறுதிப்பாடாகும்,” என்று கூறினார்.

மாநிலத்தின் பொது மற்றும் தனியார் வீடமைப்புத் திட்டங்கள் பராமரிப்பதற்காக பினாங்கு மாநில அரசு ஏறக்குறைய ரிம267 மில்லியன் (இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி) செலவிட்டதாக ஜெக்டிப்  கூறினார்.

மேலும், பொது மக்கள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். 

“பினாங்கில் எஸ்.ஓ.பி இணக்க விகிதம் இன்னும் அதிகமாக உள்ளது, தீவில் 99.6% மற்றும் நிலப்பரப்பில் 99.38%,” என்றார்.

பினாங்கு மாநிலத்தில் மார்ச்,21 ஆம் தேதி வரை 444,185 பேர்கள் தேசிய கோவிட் -19 நோய்த் தடுப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். அதேவேளையில், மார்ச்,21 வரை 28,644 பேர்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர். 

ஜெக்டிப் தனது குழுவினருடன் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்திற்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு உணவு பொட்டலம் வழங்கினார்.