தாமான் ஹன் சியாங் அடுக்குமாடி குடியிருப்பு புத்துயிர் பெறும் – ஜெக்டிப்

Admin

ஜார்ஜ்டவுன் – 40 ஆண்டுகள் பழமையான ஜாலான் சுங்கையில் அமைந்துள்ள தாமான் ஹன் சியாங் அடுக்குமாடி குடியிருப்பு 6 புலோக்குகளுடன் 200 யூனிட் வீடுகளைக் கொண்டிருக்கின்றது. இந்த அடுக்குமாடி குடியிருப்புக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் பினாங்கு மாநில வீடமைப்புப் பராமரிப்பு நிதியம் 80% கீழ் மூன்று தவணையாக சாயம் பூசப்படும் என வீடமைப்பு, உள்ளூராட்சி, கிராமப்புர மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ அறிவித்தார்.

தாமான் ஹன் சியாங் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சாயம் பூசும் திட்டத்திற்காக ரிம220,000 தேவைப்படும் வேளையில் மாநில அரசு ரிம44,000 (20%) நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது மீதமுள்ள ரிம176,000(80%) நிதியை அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேலாண்மை கழகம் பொறுப்பேற்கும் என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் விவரித்தார்.

“முதல் கட்டமாக இத்திட்டத்தில் ’25’ மற்றும் ’27’ ஆகிய இரண்டு புலோக்களுக்குச் சாயம் பூசப்படும். இந்த முதல் கட்ட திட்டம் செயல்படுத்த ரிம60,000 நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. இத்திட்டத்திற்கு மாநில அரசு ரிம12,000 வழங்கும் வேளையில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் பிரதமர் துறையின் நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் ரிம48,000 நிதி பெற்று தந்துள்ளார் என்பது பாராட்டக்குரியதாகும்.

இக்குடியிருப்பாளர்கள் முதல் கட்ட சாயம் பூசும் திட்டத்திற்காக ஒரு சென் கூட செலவிட தேவையில்லை என தாமான் ஹன் சியாங் அடுக்குமாடி குடியிருப்பின் மேலாண்மை கழகம் குடியிருப்பாளர்களிடம் காசோலை எடுத்து வழங்கினார் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ.

மேலும், இரண்டாம் கட்ட ’42’ புலோக் சாயம் பூசும் திட்டத்திற்கு ரிம70,000 பொருட்செலவு தேவைப்படும். இதற்கு மாநில அரசு ரிம14,000 நிதி ஒதுக்கீடு வழங்கும் வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் பிரதமர் துறையின் நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் மேலும் ரிம50,000-க்கு நிதி விண்ணப்பம் செய்வார். இதனிடையே, இந்த இரண்டாம் கட்ட திட்டத்திற்காக அவர்தம் நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரிம6,000 நிதி ஒதுக்கீடு வழங்குவார் என்பது பாராட்டக்குரியதாகும்.

தாமான் ஹன் சியாங் மேலாண்மை நிர்வாகத் தலைவர் உங் லேய் பேங் மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் அதனைப் பூர்த்திச்செய்யும் நம்பிக்கை கூட்டணி அரசிற்கு தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அடுக்குமடி குடியிருப்பு புதுப்பிக்கப்படவுள்ளதை எண்ணி குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.