துன் சர்டுன் பொதுச் சந்தை உணவு வளாகத்தில் ரொக்கமற்ற பரிவர்த்தனை – ஜெக்டிப்

Admin

ஸ்ரீ டெலிமா – பினாங்கு மாநில அரசு பொது மக்களிடையே ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் முயற்சியாக இன்று தாமான் துன் சர்டுன் பொதுச் சந்தை மற்றும் துன் சர்டன் உணவு வளாகத்தில் மின் கட்டண திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

மாநில அரசு இம்மாநில வணிகர்களிடையே தொழில்நுட்ப பயன்பாட்டை விரிவுபடுத்தும்
முயற்சியாக இத்திட்டம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வீடமைப்பு, உள்ளூராட்சி மற்றும் நகர்ப்புற & கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.

இந்த இலக்கை அடைய, உள்ளூராட்சி பிரிவு மூலம் மாநில அரசு மலேசிய தேசிய வங்கி (பி.என்.எம்), டபிள்யூ.சி.ஐ.டி 2020 சென்ரியான் பெர்ஹாட், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத மின்னணு வழங்குநர்களான கிராப் மற்றும் பூஸ்ட் போன்றவை பினாங்கில் அதிக மின் கட்டண வணிகங்களை ஊக்குவிக்கின்றன.

“இன்று மலேசியர்கள் கடைப்பிடிக்கும் புதிய விதிமுறைகளில் ஒன்று மின்னியல் முறையில் பொருட்களை வாங்குவது. மின்-பணப்பை போன்ற அதிநவீன மின்-கட்டண முறைகள் கிடைப்பது, வர்த்தகர்கள் செலவு, செயல்திறன், பாதுகாப்பு போன்ற பல நன்மைகளை அனுபவிக்க உதவும். இதன் மூலம் வணிகங்களுக்கு எளிதாகவும், வேகமாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் விற்பனை அதிகரிக்க அதிக வாய்ப்புகளை வழங்கும்.

“எனவே, ஒரு தொடக்கமாக, பினாங்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பொதுச் சந்தைகள் மற்றும் உணவு வளாகங்களுக்கு விரிவுபடுத்துவதற்கு முன், தமான் துன் சர்டுன் பொதுச் சந்தை மற்றும் துன் சர்டன் உணவு வளாகத்தை மாநில அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

“இத்திட்டம் செயல்படுத்த, ​​நாங்கள் (மாநில அரசு) துன் சர்டன் அங்காடி வியாபாரி சங்கத்தின் முழு ஆதரவையும் பெற்றுள்ளோம், இங்குள்ள வர்த்தகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளோம், ”என்று செய்தியாளர் சந்திப்பு க் கூட்டத்தில் தெரிவித்தார்.

தற்போது, ​​துன் சர்டுன் பொதுச் சந்தையில் 25 வர்த்தகர்கள் உள்ளனர், மேலும் 17 வர்த்தகர்கள் மேபேங்க் கியூ.ஆர்.பே, கிராப் ஆப் மற்றும் பூஸ்ட் பயன்பாடுகள் மூலம் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், தசெக் முத்தியாரா சிட்டி (செபெராங் பிறை) பொதுச் சந்தையில், 15 சதவீத வர்த்தகர்கள் இந்த ரொக்கமற்ற பரிவர்த்தனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இச்செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் செர்லினா அப்துல் ராசிட், பினாங்கு மாநகர் கழக தலைவர் டத்தோ பண்டார் டத்தோ இயூ துங் சியாங் மற்றும் செபராங் பிறை மாநகர் கழகத் தலைவர் டத்தோ பண்டார் டத்தோ ரோசாலி முகமாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், ஜெக்டிப் கூறுகையில் பினாங்கு மக்களை ரொக்கமற்ற பரிவர்த்தனை செலுத்தும் முறையைப் பயன்படுத்தவும்; மக்களை ஈர்க்கும் முயற்சியாக இச்செயலி பயன்பாடு மூலம் சலுகைகள் வழங்கப்பட வேண்டும், என்றார்.

தொடர்ந்து, இரண்டு ஊராட்சி மன்றங்களும் தத்தம் 99.45% (எம்.பி.பி.பி) மற்றும் 99.32% (எம்.பி.எஸ்.பி) நடமாட்டக் கட்டுபாடு ஆணையை பின்பற்றியுள்ளனர்.