பாகான் இந்தியர் கார்னிவல் வருடாந்திர விழாவாக நடத்த இலக்கு

Admin

 

பாகான் – பட்டர்வொர்த் இந்திய நல அமைப்பு மற்றும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மைய ஏற்பாட்டில் பாகான் இந்தியர் கார்னிவல் முதல்முறையாக வெற்றிக்கரமாக நடைபெற்றது.

“இரண்டு ஆண்டு கால கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்திற்குப் பின்னர் பாகானில் 6,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த கார்னிவலில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை டத்தோ ஹஜி அமாட் படாவி திடலில் ஏற்று நடத்த இலவசமாக வழங்கிய செபராங் பிறை மாநகர் கழகத்திற்கு (எம்.பி.எஸ்.பி) நன்றி,” என பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

பாகான் இந்தியர் கார்னிவலுக்கு இவ்வாண்டு பொதுமக்கள் வழங்கிய ஆதரவின் காரணத்தால் இந்நிகழ்ச்சி வரும் காலங்களிலும் தொடர்ந்து ஏற்பாடு செய்ய இணக்கம் கொண்டுள்ளதாக, லிம் சூளுரைத்தார்.


“இந்த கார்னிவலில் பாகான் மக்கள் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மட்டுமின்றி, பாகான் வட்டார பிள்ளைகள் தங்கள் திறமைகளையும் வெளிப்படுத்தவும், சிறு வியாபாரிகளுக்கு வணிக வாய்ப்புகளை வழங்கவும் வாய்ப்பளிக்கிறது. கோவிட்-19 இன் சவால்கள் மற்றும் பொருட்களின் விலையேற்றம் காரணமாக கூடுதல் பொருளாதார சவால்களுடன், இதுபோன்ற ஒரு திட்டத்தை அமைப்பதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் மன அழுத்தத்தையும் குறைக்க முடியும்,” என ஆயிர் புத்தே சட்டமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய லிம், அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினத்தைப் பற்றி தமதுரையில் கண்டனம் தெரிவித்தார். பொருட்களின் விலை ஏற்றம் குறித்து தொடர்ந்து அவர் குரல் ஏழுப்பவிருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

பாகான் இந்தியர் கார்னிவலில் காற்பந்து போட்டி, பாட்டுப் போட்டி, வர்ணம் தீட்டும் போட்டி, டேக்வாண்டோ தற்காப்பு கலை படைப்பு, இந்திய பாரம்பரிய நடனம், சிலம்பம் மற்றும் அதிஷ்ட குலுக்கள் ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிகழ்ச்சியில் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் மோய் லாய், எம்.பி.எஸ்.பி கவுன்சில் உறுப்பினர்களான சீ ஈ கீன் & டேவி எங், தான் ஶ்ரீ டத்தோ ரமேஸ், டத்தோ ஶ்ரீ ஆர்.எ அருணாசலம், டத்தோ கோபாலகிருஷ்ணன் மற்றும் பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாகத் தலைவர் டத்தோ இராமசந்திரன் ஆகியோர் வருகையளித்தனர்.

“இரண்டு மாத காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் எனது நன்றி,” என பட்டர்வொர்த் இந்தியர் நல அமைப்புத் தலைவர் குமரன் கிருஷ்ணன் @ கெல்வின் தெரிவித்தார். 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் இந்தியர்கள் பயன்பெறும் திட்டங்களும் உதவிகளும் வழங்கப்படுவதாக குமரன் தெரிவித்தார்.