பினாங்கின் உயர் தொழில்நுட்பத் துறைக்கு வலுசேர்க்கும் எமெரிக்ஸ் மலேசியா நிறுவனம்

img 20260731 wa0180

சிம்பாங் அம்பாட் – பினாங்கு மாநிலத்தில் மேம்பட்ட மின்னணுவியல் சோதனை மற்றும் உபகரணத் தீர்வுகளை வழங்கும் நிறுவனமான எமெரிக்ஸ் மலேசியா சென் பெர்ஹாட், தனது புதிய ஆலையை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. இது மாநிலத்தின் உயர் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் பொறியியல் சூழல் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

img 20260731 wa0177

“500-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் (MNCs) மற்றும் 7,000 சிறு, நடுத்தர நிறுவனங்களை (SMEs) உள்ளடக்கிய முதிர்ச்சியடைந்த தொழில்துறைச் சூழலமைப்பைக் கொண்ட பினாங்கு, உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பத் தொழில்முனைவோரின் விருப்பமான முதலீட்டுத் தளமாகத் திகழ்கிறது.

img 20260731 wa0176

“எமெரிக்ஸ் மலேசியாவின் புதிய வளாகத்தின் வருகை, பினாங்கின் உயர் தொழில்நுட்பத் துறையில் முன்னணி மாநிலமாகத் திகழும் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், தொழில்நுட்பப் பரிமாற்றம், உள்ளூர் திறமையாளர்களின் மேம்பாடு மற்றும் சிறப்புப் பொறியியல் நிபுணத்துவத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்,” என அந்நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைத்த பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ தெரிவித்தார்.
img 20260731 wa0154

இந்தத் திறப்பு விழாவில், பினாங்கு மலாய் சங்கத்தின் (PEMENANG) தலைவர் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹாஜி முகமது யூசுஃப் லத்தீஃப் மற்றும் CREST ஆலோசகரும், முன்னாள் அனைத்துலக வர்த்தகம், தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான பினாங்கு மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ஹாஜி அப்துல் ஹலீம் பின் ஹாஜி ஹுசைன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
img 20260731 wa0179

மேலும், இன்வெஸ்ட்பினாங்கின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்ரீ லூ லீ லியான், எமெரிக்ஸ் மலேசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்லியம் லீ, அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவினர், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மூலோபாயக் கூட்டாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தத் திறப்பு விழா பினாங்கிற்கு மட்டுமல்ல, மலேசியாவிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. ஏனெனில், எமெரிக்ஸ் மலேசியா நிறுவனம் நாட்டில் அமைந்துள்ள முதல் மற்றும் ஒரே ‘ஃப்ளையிங் ப்ரோப் டெஸ்டர்’ உற்பத்தியாளர் என்று ஜக்தீப் கூறினார்.

இந்த சிறப்பு வசதியை நிறுவுவது, மேம்பட்ட ‘ஃப்ளையிங் ப்ரோப் டெஸ்டர்’ மற்றும் PCBA சோதனைத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் தேசிய விநியோகச் சங்கிலியில் உள்ள ஒரு முக்கிய இடைவெளியை நிரப்ப உதவுகிறது. அதே வேளையில், உள்ளூர் மற்றும் பிராந்திய உற்பத்தியாளர்கள் பினாங்கில் உலகத் தரம் வாய்ந்த சோதனை இயந்திரங்கள், உள்ளூர்மயமாக்கப்பட்ட பொறியியல் நிபுணத்துவம் மற்றும் துரித தொழில்நுட்ப ஆதரவைப் பெற வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

“உயர் தொழில்நுட்ப மின்னணு உற்பத்தி, குறைக்கடத்தி ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்துறை தீர்வுகளுக்கான ஒரு பிராந்திய வல்லமை மிக்க மையமாக பினாங்கு தொடர்ந்து திகழ்கிறது. இது போன்ற வசதிகள், பாரம்பரிய உற்பத்தியைத் தாண்டி உயர் மதிப்பு தொழில்நுட்ப வடிவமைப்பு, துல்லியமான ஒருங்கிணைப்பு மற்றும் சிறப்புப் பொறியியல் சேவைகளை நோக்கி பயணிப்பதன் மூலம் பினாங்கின் நிலையை மேலும் வலுப்படுத்துகின்றன,” என்று அவர் கூறினார்.

“உயர் துல்லியமான ‘ஃப்ளையிங் ப்ரோப் டெஸ்டர்’ கருவிகளின் செயல்பாடு மற்றும் மேம்பாட்டிற்கு உயர்தர பொறியியல் திறன்கள் அவசியமாகின்றன. இதன் மூலம், உள்ளூர் பொறியியலாளர்கள்
மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிநவீன சோதனைத் தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெறவும், அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்தவும், உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்புகள் உருவாகின்றன, என ஜெக்தீப் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் உருமாற்றம் மற்றும் உயர் தொழில்நுட்பத் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம், எதிர்காலத்திற்குத் தயாரான, திறன்மிக்க மற்றும் வலுவான மனித வளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் ‘பினாங்கு2030’ தொலைநோக்குத் திட்டத்துடனும் இம்முயற்சி ஒத்துப்போகிறது, என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“நமது உள்ளூர் சூழலமைப்பு உலகளவில் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்காக, எமெரிக்ஸ் மலேசியா போன்ற உயர் தொழில்நுட்ப முன்னோடிகளை வளர்ப்பதில் பினாங்கு மாநில அரசும், இன்வெஸ்ட்பினாங்கும் முழுமையாக உறுதியுடன் உள்ளன,” என்று அவர் கூறினார்.

இந்தப் புதிய மையம், நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துதல், உள்ளூர்மயமாக்கப்பட்ட தொழில்நுட்ப ஆதரவை வழங்குதல் மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உயர் துல்லியமான ‘சர்க்யூட் போர்டு’ சோதனைக்கான பிராந்திய விற்பனை மற்றும் சேவைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

மேலும், இந்தச் சாதனைக்காக வில்லியம் லீ மற்றும் எமெரிக்ஸ் மலேசியா குழுவினர் அனைவருக்கும் ஜக்தீப் வாழ்த்து தெரிவித்தார். அந்நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, உயர் தொழில்நுட்ப மின்னணுவியல் துறையில் தனது தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.