பினாங்கின் பொருளாதார வளர்ச்சியில் MICCI-யின் பங்களிப்பு பாராட்டத்தக்கது – முதலமைச்சர்

img 20261129 wa0524

செபராங் பிறை – பினாங்கு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வர்த்தகத் துறைக்கும் நீண்டகாலமாகப் பங்களித்து வரும் மலேசிய பினாங்கு
இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத்தின் (MICCI)
103ஆவது ஆண்டு விழா மற்றும் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வில், அதன் நீண்டகாலச் சேவைகள் பாராட்டப்பட்டது.

img 20261129 wa0523

இந்த நிகழ்வில் உரையாற்றிய மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், MICCI சங்கத்தின்
103ஆவது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், 1786ஆம் ஆண்டு பினாங்குத் துறைமுகம் திறக்கப்பட்ட காலம் முதல் இந்தியச் சமூகம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்தார்.

img 20261129 wa0507

1920 ஆண்டு தொடக்கத்தில் நிறுவப்பட்ட MICCI சங்கத்தின் ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலம் மற்றும் 1969ஆம் ஆண்டு பினாங்கு தனது தடையற்ற துறைமுக அந்தஸ்தை இழந்தது உள்ளிட்ட பல்வேறு சவால்களைக் கடந்து, தொடர்ந்து செயல்பட்டு வர்த்தகத் துறையில் தனது பங்களிப்பை நிலைநாட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

img 20261129 wa0518

இதனிடையே, பினாங்கின் பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை பினாங்கில் ரிம23 பில்லியன் முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 26,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

img 20261129 wa0515
குறிப்பிட்ட காலப்பகுதியில், மலேசிய மாநிலங்களிலேயே உற்பத்தித் துறையில் அதிக எண்ணிக்கையிலான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாகப் பினாங்கு திகழ்ந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், பினாங்கின் முதலீட்டு ஈர்ப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள், பினாங்கு தொழில்நுட்ப நிதி மையம் (Penang Technology Finance Centre) மற்றும் புதிய தொழில் தொடக்க நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) ஆதரவளிக்கும் வகையில் RM150 மில்லியன் மதிப்பிலான மூலோபாய முதலீட்டு நிதி ஆகியவை முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், சிலிக்கான் தீவில் பசுமைத் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் திட்டமும், முதலீட்டாளர்களின் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடுதல் தொழில்துறை நிலங்களைத் தயார்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

பினாங்கின் பொருளாதார வளர்ச்சியால் உருவாகும் வாய்ப்புகளை இந்தியத் தொழில்முனைவோரும் நிறுவனங்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதேவேளையில், முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம் தொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்கான வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதில் MICCI சங்கம் ஆற்றிய பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

மாநில அரசுக்கும் இந்த சங்கத்திற்கும் இடையிலான நீண்டகால நல்லுறவு தொடர்ந்து வலுப்பெற்று, வர்த்தகத் துறையினருக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், பினாங்கின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்ந்து துணைபுரியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இறுதியாக, மாநில அரசுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வரும் MICCI சங்கத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தியச் சமூகத்தினருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.