ஜார்ச்டவுன் – நீண்டகால நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, அதிக மதிப்புள்ள முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வருவாய் ஆதாரங்களைப் பன்முகப்படுத்துவதற்கும் மாநில அரசு தனது முயற்சிகளை தீவிரப்படுத்தி வருவதாக முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், பாரம்பரிய மற்றும் வளர்ந்து வரும் துறைகள் இரண்டின் மூலமும் நிலையான வருவாய் வளர்ச்சியை உறுதி செய்வதோடு, தொழில்துறை போட்டித்திறனை வலுப்படுத்தி, புதிய பொருளாதார உந்துசக்திகளை விரிவுபடுத்துவதிலும் மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
மேலும், பினாங்கு மாநிலம் ரிம63.9 பில்லியன் மதிப்பிலான அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளை பதிவு செய்துள்ளதாகவும், அதில் சுமார் 30 விழுக்காடு உள்நாட்டு நேரடி முதலீடுகள் (DDI) ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெர்தாம் சட்டமன்றப் உறுப்பினர் ரீசால் மெரிக்கன் நைனா மெரிக்கன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சாவ், உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள், குறிப்பாக போக்குவரத்து மற்றும் விநியோக அமைப்பு சங்கிலி நிலைத்தன்மையில் பல வெளிப்புற சவால்களை உருவாக்கியுள்ளன என்று கூறினார்.
மத்திய கிழக்கு வழியாகச் செல்லும் கப்பல் வழித்தடங்களில் ஏற்படும் இடையூறுகள், பயண நேரத்தை அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் அதிகரித்து வரும் செலவுகள், இறுக்கமான விநியோக கால அட்டவணையில் இயங்கும் தொழில்களுக்கான விநியோகச் சங்கிலி நம்பகத்தன்மையை மேலும் சிக்கலாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசு, இன்வெஸ்ட்பினாங்கு (InvestPenang) மூலம், துறைசார்ந்த தாக்கங்களை மதிப்பிடுவதற்காக, தொழில்துறையினருடன் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், சமீபத்திய கலந்துரையாடல் அமர்வுகளில் வலுவான பங்கேற்பு காணப்பட்டதாகவும் சாவ் கூறினார்.
“பல்வேறு துறைகளில் ஏற்படும் தாக்கங்களைப் புரிந்துகொள்வதற்காக தொடர்ச்சியான கலந்துரையாடல் அமர்வுகளை நடத்தி வருகிறோம். சில தொழில்கள் அவற்றின் செயல்பாட்டு தன்மையைப் பொறுத்து அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன,” என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பரவலான சவால்களை எதிர்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ‘Airbnb’ போன்ற குறுகிய கால வாடகைத் தங்குமிடங்களுக்கான ஒழுங்குமுறை தொடர்பாக மாச்சாங் புபு சட்டமன்ற உறுப்பினர் லீ கை லூன் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்த சாவ், தெளிவான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தால் மாநில அரசு இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறினார்.
சுற்றுலாப் பயணிகளுக்கான மாற்று தங்குமிட விருப்பங்களாக Airbnb மற்றும் அதுபோன்ற தளங்கள் உருவெடுத்துள்ள போதிலும், தங்கும்விடுதிகளைப் போன்ற கட்டணங்களை விதிக்க அனுமதிக்கும் முறையான ஒப்புதல் கட்டமைப்புகள் இல்லாமல் அவை தற்போது செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
“தற்போது தெளிவான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக Airbnb துறையை நிர்வகிப்பதில் நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். இது சுற்றுலாப் பயணிகளுக்கான மாற்று தங்குமிடமாக இருந்தாலும், இது இன்னும் முறையாக ஒழுங்குபடுத்தப்படவில்லை,” என்று அவர் கூறினார்.
மாநில மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு சிறந்த நிர்வாகமும் வருவாய் வாய்ப்புகளும் கிடைக்கும் வகையில், இத்துறைக்கு தெளிவான ஒழுங்குமுறை கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என மாநில அரசு நம்புகிறது என சாவ் மேலும் கூறினார்.
மாநில அரசு, வளர்ச்சி அடைந்து வரும் தங்குமிட தளங்களை கட்டுப்படுத்தும் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை நோக்கி மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.