ஜார்ச்டவுன் – பினாங்கில் மன இறுக்கக் குறைபாடு (Autism) கொண்ட தனிநபர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், விரிவான மற்றும் ஒருங்கிணைந்த சேவைகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.
சமூக மேம்பாடு, நலன் மற்றும் இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம் கூறுகையில், 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, பினாங்கில் மொத்தம் 4,850 பேர் மன இறுக்கக் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
“அவர்களில் 4,021 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். அதேவேளையில், 19 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் 727 பேர், 36 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் 97 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து பேர் உள்ளனர்.
பினாங்கில் மன இறுக்கக் குறைபாடு கொண்ட தனிநபர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான ஆதரவை வலுப்படுத்த மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் எழுப்பிய வாய்மொழிக் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், மறுவாழ்வு, ஆரம்பகால தலையீடு மற்றும் பிற ஆதரவு வசதிகளை ஒருங்கிணைக்கும் அணுகுமுறையை வலுப்படுத்துவதற்கான தேவைகளையும் மாநில அரசு ஆராய்ந்து வருவதாக லிம் சியூ கிம் குறிப்பிட்டார்.
“மறுவாழ்வு மற்றும் ஆரம்பகால தலையீட்டுச் சேவைகளைப் பொறுத்தவரை, பினாங்கு மாநில சமூக நலத்துறை (JKM) பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவையளிக்கும் வகையில் 24 சமூக மறுவாழ்வு மையங்களை (PPDK) செயல்படுத்தி வருகிறது.
இந்த மையங்கள் மன இறுக்கக் குறைபாடு கொண்டவர்களுக்கும் சேவைகளை வழங்குகின்றன.
“மேலும், மாற்றுத்திறனாளிகளின் சமூகப் பங்கேற்பையும் ஒருங்கிணைப்பையும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களது குடும்பத்தினரும் உள்ளூர் சமூகத்தினரும் இந்தச் சேவைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்,” என்று அவர் விளக்கமளித்தார்.
இருப்பினும், தற்போது பினாங்கு மாநில சமூக நலத்துறையின் கீழ் மன இறுக்கக் குறைபாடு கொண்டவர்களுக்கெனத் தனியாகச் செயல்படும் சிகிச்சை மையம் அல்லது பயிற்சி மையம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், புக்கிட் மெர்தாஜாம், அல்மா, கம்போங் தெலோக் பகுதியில் அமைந்துள்ள சிறப்புக் கல்விச் சேவை மையம் (3PK), மன இறுக்கக் குறைபாடு உள்ளிட்ட சிறப்புக் கல்வித் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு (MBPK) ஆதரவுச் சேவைகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
அந்த மையத்தில் நான்கு சிறப்புத் துறை அதிகாரிகள் பணியாற்றி வருவதுடன், பல்வேறு வகையான சிறப்புக் கல்வித் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஆதரவுச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
அதேவேளையில், மன இறுக்கக் குறைபாடு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் பினாங்கு மாநில அரசு, பினாங்கு பிந்தாங்-பிந்தாங் பெர்சினார் சங்கம் மற்றும் LemmeLearn உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
மேலும், சமூக நலத்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள மலேசிய தேசிய மன இறுக்கக் குறைபாடு சங்கமும் (NASOM), மன இறுக்கக் குறைபாடு கொண்ட தனிநபரின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களது வளர்ச்சி மற்றும் கற்றல் திறன்களை மேம்படுத்துவதற்கான சிறப்புச் சேவைகளையும் திட்டங்களையும் வழங்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.