பினாங்கு அனைத்துலக அறிவியல் கண்காட்சி மீண்டும் மலர்கிறது

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு அனைத்துலக அறிவியல் கண்காட்சி (PISF) 2022, பினாங்கு மற்றும் வட மாநிலங்களில் உள்ள மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புத்தாக்கத் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. இக்கண்காட்சி 10வது முறையாக நடைபெறும் வருடாந்திர நிகழ்ச்சியாகும். இது வருகின்ற டிசம்பர் 3 முதல் 10 வரை நடைபெறும்.

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2020 இல் ரத்து செய்யப்பட்ட பின்னர்,
கடந்த ஆண்டு முதல் முறையாக இக்கண்காட்சி இயங்கலை வாயிலாக நடத்தப்பட்டதற்கு முதல்வர் சாவ் கொன் இயோவ் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

“பினாங்கு அறிவியல் கிளாஸ்டர் (PSC)
இந்த ஆண்டு நடத்தப்படும்
PISF-க்கு ஒரு புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம், இக்கண்காட்சி இயங்கலை மற்றும் நேரடியாகக் கலந்து கொள்ளும் வகையில் செயல்பாடுக் காண்கிறது.

“இது ஒரு பயண அறிவியல் கண்காட்சி, இயங்கலை நிறுவன சுற்றுப்பயணங்கள், தொழில் பட்டறைகள், மேக்கர்லேப் பள்ளிகளின் பட்டறைகள் மற்றும் தொழில் கலந்துரையாடல் ஆகியவை அடங்கும்.

“PSC மற்றும் நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறுவதன் மூலம்
எதிர்காலத்தில் இம்மாநிலத்தின் தொழில் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திறன் மிக்க மனித வளத்தை உருவாக்க முடியும்.

“பினாங்கு நாட்டின் பொருளாதார சக்தியாக விளங்குகிறது. இது வர்த்தகம் மற்றும் முதலீட்டு செயல்பாடுகளால் தெளிவாகத் தெரிகிறது,” என்று முதல்வர் மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பினாங்கு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களைத் தொடர்ந்து ஈர்த்து, அதன் முதலீட்டை இங்கு அமைப்பதற்காகச் செயல்படுவதை சாவ் சுட்டிக்காட்டினார்.

“திறமை மற்றும் பொருளாதார வளர்ச்சி ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பெற்றோர்களும் பிள்ளைகளும் கண்காட்சியில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.

PSC வாரியத் தலைவருமான இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, இக்கண்காட்சியில் கலந்து கொள்வதன் மூலம் மாணவர்கள் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) குறித்து கூடுதல் விழிப்புணர்வு பெறுவதோடு ஆர்வம் கொள்வர், என்றார்.

இந்த அறிவியல் கண்காட்சி பட்டர்வொர்த் அரேனா (டிசம்பர் 3 & 4), அருஸ் அகாடமி (டிசம்பர் 7 முதல் 9 வரை), பினாங்கு திறன் மேம்பாட்டு மையம் (PSDC) (டிசம்பர் 10), பெர்மாய் இண்டா இடைநிலைப்பள்ளி, சேக்ரட் ஹார்ட் இடைநிலைப்பள்ளி மற்றும்
ViTrox Makerspace (டிசம்பர் 3-10 வரை பல்வேறு தேதிகளில்) நடைபெறும். அனைத்து இடங்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சிக்கு நுழைவு இலவசம்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் PSC இயக்குனர் டத்தோ யூன் சோன் லியோங்; PSC தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஹூய் பெங் யீ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.