பினாங்கு மாநிலத்தின் 22வது வைசாகி திறந்த இல்லக் கொண்டாட்டம் பன்முகத்தன்மையைச் சித்தரிக்கிறது

Admin
2a2dd2a7 f4d0 475e 96a1 048b3e537c47

ஜார்ச்வுன் – பினாங்கு மாநில 22-ஆவது வைசாகி திறந்த இல்ல உபசரிப்பு இன்று மாலை எஸ்பிளனேடில் (Esplanade) நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதோடு, தலைவர்கள் மற்றும் சமூகங்கள் ஒன்றிணைந்து ஒற்றுமை, கலாச்சார மற்றும் நல்லிணக்கத்துடன் கொண்டாடினர்.

மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இந்த நீண்டகால நிகழ்ச்சி மாநிலத்தில் சீக்கியர் சமூகத்தின் நிலைத்திருக்கும் பங்களிப்பையும், பினாங்கு மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை மீதான உறுதியையும் பிரதிபலிக்கிறது, என்றார்.

“இது மாநிலத்தில் 22வது ஆண்டை எட்டிய ஒரு அர்த்தமுள்ள கொண்டாட்டமாகும்,” என்று அவர் தனது உரையில் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் ரம்லி ஙா தாலிப் மற்றும் அவரது துணைவியார் தோ புவான் ராஜா நூரா அஷிகின் ராஜா அப்துல்லா, இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ, ஆட்சிக்குழு உறுப்பினர்களான லிம் சியூ கிம், வோங் ஹொன் வாய், புக்கிட் குலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், எம்.பி.பி.பி மேயர் டத்தோ இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சீக்கியர் சமூகத்தின் வலுவான குடும்ப மதிப்புகளை சாவ் குறிப்பிட்டார். அவர்கள் ஒருவருக்கொருவர் பொறுப்புணர்வு கொண்ட நெருக்கமான சமூகமாக உள்ளனர் என்றார்.

“மூத்தவர்களுக்கு மரியாதை, இளையவர்களுக்கு அக்கறை, நல்ல காலங்களிலும் கடினமான காலங்களிலும் ஒன்றிணைந்து நிற்கும் மனப்பாங்கு ஆகியவை இதில் தென்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்து பேசும்போது, இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி பினாங்கு மலேசியாவின் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

“அதே நேரத்தில் இறக்குமதியும் அதிகரித்து வருகிறது. இது நாம் அதிகம் உற்பத்தி செய்கிறோம் என்பதையும், வெளிநாட்டு உள்ளீடுகளின் மீது அதிகமாக சார்ந்திருக்கிறோம் என்பதையும் காட்டுகிறது. இது உற்பத்தித் திறன் தொடர்பான பெரிய பிரச்சனையை வெளிப்படுத்துகிறது,” என்றார்.

மலேசியாவின் உற்பத்தித் திறன் மேம்பட்டாலும், நிலையான வளர்ச்சிக்காக கூடுதல் முயற்சிகள் தேவை என அவர் வலியுறுத்தினார்.

“நாம் கடினமாக உழைக்கிறோம், ஆனால் நிலையான வளர்ச்சிக்காக மேலும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் செயல்பட வேண்டும்,” என்றார்.

வைசாகி கொண்டாட்டத்தின் மதிப்புகளுடன் ஒப்பிட்டு, சீக்கியர் சமூகத்தின் உறுதி, கட்டுப்பாடு மற்றும் சுயநம்பிக்கை போன்ற பண்புகள் முக்கியமான பாடங்களை வழங்குகின்றன என்று சாவ் கூறினார்.

“சீக்கியர் சமூகத்தில் பலர் கட்டுப்பாடு, தொழில் முனைவுத்தன்மை மற்றும் சுயநம்பிக்கை மூலம் தங்கள் வாழ்க்கையை உருவாக்கியுள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் சமூக சேவையிலும் ஈடுபட்டு, எப்போதும் பிறருக்கு உதவுகின்றனர்,” என்றார்.

உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் மற்றும் மோதல்கள் போன்ற நிலைமைகளை கருத்தில் கொண்டு, உள்ளார்ந்த உறுதியை வலுப்படுத்துவது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.

“உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நம்மை நாமே வலுப்படுத்திக் கொள்ளலாம்.பினாங்கு எப்போதும் அதன் மக்களால் வெற்றி பெற்றுள்ளது, ஏனெனில் நாம் ஒன்றிணைந்து செயல்படுகிறோம், ஒருவரை ஒருவர் மதிக்கிறோம் மற்றும் ஒன்றாக முன்னேறுகிறோம்,” என்றார்.

7d7cd8be 95d1 4fbb 82b0 100770511c78

இந்த நிகழ்ச்சி வாடா குருத்வாரா சாஹிப் மற்றும் மாநில அரசின் ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாநில தலைவர்கள், சமூக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

சாவ் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்து, அனைவருக்கும் வைசாகி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஜக்தீப் சிங் டியோவும் இந்த விழாவின் முக்கியத்துவத்தை தமதுரையில் விளக்கினார், இது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பாராட்டைப் பெற்றது.

இந்த நிகழ்வில் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் சுவையான விருந்து உபசரிப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.