பினாங்கு வீட்டுவசதி வாரியம்  வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டங்களை மேம்படுத்த இலக்கு

தெலோக் கும்பார் – 2022 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், பினாங்கு மாநில அரசு அதன் மாநில வீட்டுவசதி வாரியத்தின் மூலம் பினாங்கு வாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் நிர்மாணிக்க உறுதியளித்துள்ளது.

மாநில வீட்டுவசதி, உள்ளாட்சி, நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினரான ஜெக்டிப் சிங் டியோ, பாயான் லெப்பாஸ், லோட் 244, முக்கிம் 9, தெலுக் கும்பார் பகுதியில் ஒரு புதிய வீட்டமைப்புத் திட்டத்தை அறிவித்தார். மேலும், சமூகத்திற்கு வாங்கும் சக்திக்கு உட்பட்ட திட்டங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

பினாங்கு மாநிலம் தற்போது 130,087 பல்வேறு வகையான வீடுகளை வழங்கும் இலக்கினை எட்டியுள்ளது. அதாவது, இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் அதன் 220,000 இலக்கு யூனிட்களில் வழங்கும் திட்டத்தில் 60 விழுக்காட்டை  அடைந்துள்ளது, என்றார்.

“பினாங்குவாழ் மக்களின் நலனுக்காக வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான உரிய
நடவடிக்கையை கையாண்டு வருகிறது.

“இந்த ஆண்டு மாநில வீட்டுவசதி வாரியத்தின் கீழ்  வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டங்களைத் தொடங்கவுள்ளது. எங்களின்  இலக்கு யூனிட்களைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சியில் சிறப்பாகச் செயல்படுகிறோம்.
சாதகமான முடிவுகளைக் காணலாம்,” என்று டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் பாயான் லெபாஸில் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

4.2 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்படும் இத்திட்டத்தில், 800 யூனிட் கலப்பு மேம்பாடு மற்றும் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன் மக்கள் வீட்டமைப்புத் திட்டத்தை (பி.பி.ஆர்) நிறுவ பினாங்கு மாநிலத்திற்கு உதவ முடியும் என்று ஜெக்டிப் நம்பிக்கைத் தெரிவித்தார்.

பினாங்கில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் பி.பி.ஆர் வீடமைப்புத் திட்ட மேம்பாட்டிற்காக 72.3 ஏக்கர் நிலத்தை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது, என்பதை ஜெக்டிப் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

“மாநில அரசு இத்திட்டத்திற்காக நிலத்தை அடையாளம் கண்ட நிலையில்  அதனை செயல்படுத்த மத்திய அரசின் உத்தரவுக்காக நாங்கள் இப்போது காத்திருக்கிறோம்.

“மத்திய அரசாங்கம் ஏற்கனவே இரண்டு பி.பி.ஆர் வீடமைப்புத் திட்டங்கள் பினாங்கில் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது. அதில் ஒன்று தீவில் மற்றொன்று பெருநிலத்தில் அமைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது,” என ஜெக்டிப் நம்பிக்கைத் தெரிவித்தார்.