சிம்பாங் அம்பாட் – பிரசவத்திற்குப் பிந்தைய தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனை உறுதிப்படுத்துவது பாரம்பரிய முறையிலான பத்திய உணவுகள் மற்றும் பராமரிப்புடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. மாறாக, தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முறையான பராமரிப்பு, மருத்துவ வழிகாட்டுதல் மற்றும் சரியான அணுகுமுறை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

பதிவுசெய்யப்பட்ட பாரம்பரிய மற்றும் நிரப்பு மருத்துவ பயிற்சியாளரும்
இந்திய பிரசவப் பராமரிப்பு TIPBS சேவையின் நிறுவுநருமான ஏ.புவனேஸ்வரி @வாணி, பிரசவத்திற்குப் பிந்தைய காலம் மிகவும் முக்கியமானது என்றும், அக்காலகட்டத்தில் தாயின் உடல் மற்றும் மனநல மீட்பு, குழந்தையின் பராமரிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சிம்பாங் அம்பாட்டைச் சேர்ந்த இவர், கடந்த ஏழு ஆண்டுகளாக இத்துறையில் ஈடுபட்டு வருவதுடன், இதுவரை சுமார் 166 தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்குச் சேவையாற்றியுள்ளார்.

முன்னதாக ஒரு கிளினிக்கில் தாதியராகப் பணியாற்றிய அவர், அப்பணியிலிருந்து விலகியப் பின்னர் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்புத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

“ஆரம்பத்தில் குழந்தைப் பராமரிப்புச் சேவையைத் தொடங்கவே திட்டமிட்டேன். ஆனால், ஆய்வு செய்தபோது, குறிப்பாக இந்திய சமூகத்தைச் சேர்ந்த பல பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை உணர்ந்தேன்.
“பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு என்பது குளியல், சாம்பிராணிப் புகை அல்லது பத்திய உணவு ஆகியவற்றுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. தாயின் உடல்நலம் மற்றும் குழந்தையின் நலனுடன் தொடர்புடைய பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கியுள்ளன,” என்றார்.
இத்துறையில் தனது அனுபவத்தையும் திறனையும் மேம்படுத்தும் நோக்கில், 2020ஆம் ஆண்டு நான்கு நாட்கள் நடைபெற்ற இந்திய பிரசவ சேவை பயிற்சி வகுப்பில் அவர் பங்கேற்றார்.
இருப்பினும், தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பு தொடர்பான துறை என்பதால் அடிப்படைப் பயிற்சி மட்டும் போதாது எனக் கருதிய அவர், மேலும் முறையான பயிற்சிகளைப் பெற முடிவு செய்தார்.
இதையடுத்து, திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மலேசியத் திறன் சான்றிதழ் (SKM) பயிற்சியைப் பெற்றதுடன், பின்னர் மலேசியத் திறன் டிப்ளோமா (DKM) கல்வியையும் தொடர்ந்தார். மேலும், மலேசிய சுகாதார அமைச்சின் (KKM) கீழ் பாரம்பரிய மற்றும் துணை மருத்துவ
(PT&K) துறையில் பதிவுசெய்யப்பட்ட பயிற்சியாளராகவும் உள்ளார்.
இந்தப் பயிற்சிகளின் மூலம் பிரசவத்திற்குப் பிந்தைய தாய் பராமரிப்பு, குழந்தையைக் கையாளும் முறைகள், மசாஜ், தாய்ப்பால் சுரப்புத் தொடர்பான பராமரிப்பு மற்றும் தேவைக்கேற்ப வெப்பம், குளிர் ஒத்தடம் வழங்கும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் அவர் கூடுதல் பயிற்சியைப் பெற்றார்.
தற்போது, பிரசவத்திற்குப் பிந்தைய தாய் மற்றும் குழந்தைப் பராமரிப்பு, பத்திய உணவு தயாரித்தல், குழந்தைகளுக்கான மசாஜ், தாய்மார்களுக்கான உடல் மசாஜ், பிரசவத்திற்குப் பிந்தைய மசாஜ், தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும் மசாஜ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அவர் வழங்கி வருகிறார்.
தாமான் புத்ரி எமாஸ், சிம்பாங் அம்பாட் பகுதியில், இந்திய பிரசவப் பராமரிப்பு TIPBS எனும் மையத்தை தொடக்கி சிறந்த சேவையை வழங்கி வருகிறார்.
பாரம்பரியப் பராமரிப்பு முறைகளுடன் நவீன மருத்துவ பயிற்சியையும் இணைத்து, ஒவ்வொரு தாயின் உடல்நிலைக்கு ஏற்ப சேவைகள் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
மேலும், கர்ப்பத்தின் 17ஆவது வாரத்தைக் கடந்த பெண்களுக்கு, அவர்களின் உடல்நிலை மற்றும் தகுதியைப் பொறுத்து கர்ப்பகால மசாஜ் சேவைகளும் வழங்கப்படுகின்றன.
இத்துறையில் மேலும் பலரை உருவாக்கும் நோக்கில், பிரசவத்திற்குப் பிந்தைய தாய் மற்றும் குழந்தைப் பராமரிப்பு தொடர்பான நான்கு நாட்கள் அடிப்படைப் பயிற்சி வகுப்புகளையும் அவர் நடத்தி வருகிறார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் இந்த வகுப்புகளில், 21 வயதுக்கு மேற்பட்ட ஆர்வமுள்ளவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம்.
“பயிற்சியில் பங்கேற்று சான்றிதழ் பெறுவது மட்டுமே போதாது. தாய் மற்றும் குழந்தையை எவ்வாறு முறையாகக் கையாள்வது என்பதை நேரடிப் பயிற்சியின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும்.
“சேவைகளை வழங்கும்போது என்னுடன் இணைந்து செயல்படுமாறு பயிற்சியாளர்களை ஊக்குவிக்கிறேன். இதன் மூலம் நடைமுறைகளை நேரில் கண்டு, தேவையான அனுபவத்தைப் பெற முடியும்,” என்றார்.
கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் தற்போது சுமார் ஆறு முதல் ஏழு பேர் வரை பயிற்சி பெற்று வருகின்றனர்.
குழந்தைகளைக் கையாளும்போது தனிநபர் சுகாதாரம் மற்றும் ஒழுக்கம் மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். நகங்களைச் வெட்டியிருத்தல், முகக்கவசம் அணிதல், கைகளையும் உபகரணங்களையும் சுத்தமாக வைத்திருத்தல் போன்ற நடைமுறைகளைப் பயிற்சியாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இத்துறையில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவர் கூறுகையில், போதிய நடைமுறைப் பயிற்சியும் அனுபவமும் இல்லாமல் ஓரிரு நாட்களில் பயிற்சி வகுப்புகளை பங்கேற்ற சிலர், முறையான சேவைகளை வழங்காதது முக்கியச் சவாலாக உள்ளன, என்றார்.
“பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு என்பது ஓரிரு நாட்களில் கற்றுக்கொள்ளக்கூடிய திறன் அல்ல. இத்துறையில் ஈடுபடுபவர்கள் முறையான அறிவு, பயிற்சி மற்றும் அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
“பாரம்பரியப் பழக்கவழக்கங்களில் எது பொருத்தமானது, எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு, வாடிக்கையாளர்களுக்கு சரியான விளக்கங்களை வழங்கவும் தெரிந்திருக்க வேண்டும்,” என்றார்.
அதேவேளையில், பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் சில தாய்மார்கள் மன அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும் என்பதால், அவர்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவு வழங்குவதும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இத்துறையில் பணியாற்றுவோர் பொறுமை, பரிவு மற்றும் தொடர்பு கொள்ளும் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தாய்மார்களுக்கு மேலதிக மருத்துவ அல்லது மனநல உதவி தேவைப்படும் சூழலில் உரிய நிபுணர்களிடம் பரிந்துரைக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசுகையில், இந்த மையத்தை முழுமையான தொழில்முறைப் பயிற்சி மையமாக விரிவுபடுத்தி, தாய் மற்றும் குழந்தைப் பராமரிப்புத் துறையில் திறமையான பலரை உருவாக்குவதே தனது இலக்கு, என்றார்.
மேலும், குழந்தைகளுக்கான மசாஜ் எண்ணெய், தாய்மார்களுக்கான பராமரிப்புப் பொருட்கள் மற்றும் தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும் தயாரிப்புகள் உள்ளிட்டவற்றைத் சுயமாகவே தயாரித்து அறிமுகப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
“இளம் தலைமுறையினர் இத்துறையை எதிர்காலம் கொண்ட ஒரு தொழிலாகப் பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
“முக்கியமாக, ஆர்வம், பொறுமை மற்றும் பொறுப்புணர்வு அவசியம். நாம் ஒரு சேவையை மட்டும் வழங்கவில்லை; குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் தாய்மார்கள் உடலளவிலும் மனதளவிலும் மீண்டு வருவதற்கும் உதவுகிறோம்,” என்றார்.
மேலும், பிரசவத்திற்கான எதிர்பார்க்கப்படும் தேதிக்கு 10 முதல் 14 வாரங்களுக்கு முன்பே வாடிக்கையாளர்கள் சேவைகளை முன்பதிவு செய்வது சிறந்தது என்றும், இதன் மூலம் சேவை அட்டவணையை முன்கூட்டியே திட்டமிட முடியும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.