பி.கே.பி-க்கு பிந்தய கோவிட்-19 பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் உள்நாட்டு வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும் – பேராசிரியர்

Admin

பிறை – கூட்டரசு அரசாங்கம் அறிவிக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டுக்குப் பிந்திய கோவிட்-19 பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் (Pakej Rangsangan Ekonomi Prihatin 2020 Pasca COVID-19) உள்நாட்டு வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வண்ணமாகத் திகழ வேண்டும். இதன் வழி, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் (பி.கே.பி) பாதிக்கப்பட்டப் பொது மக்களின் அடிப்படை பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பரிசுக்கூடை வழங்கும் நிகழ்வில் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இவ்வாறு கூறினார்.
பி.கே.பி அமலாக்கத்தினால் வியாபாரத் துறை அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பொருளாதாரத் துறை குறிப்பாக வியாபாரத் துறை மேம்பாட்டுக்கு பினாங்கு மாநில அரசு பல ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவித்திருந்தாலும் இந்தக் கட்டுப்பாட்டுக்குப் பிந்தைய கோவிட்-19 பொருளாதாரத் திட்டத்தில் உள்நாட்டு வாங்கும் சக்தியை அதிகரிக்க மாநில அரசாங்கம் பல மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தும் என பேராசிரியர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு முஸ்லிம் சமூகத்தினர் வழக்கம் போல் தங்கள் ஊர்களுக்கு (கம்போங்) செல்ல அனுமதி வழங்காதது வருத்தமளித்தாலும், சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து அதன் அமலாக்கம் மிக அவசியமே என பேராசிரியர் விளக்கமளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும், பிறை தொகுதியில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு திறந்த இல்ல உபசரிப்பு நடத்துவது வழக்கமான ஆண்டுத் திட்டமாகும். இந்த ஆண்டு பி.கே.பி அமலாக்கத்தால் அந்த நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்தி பிறை வட்டாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 348 முஸ்லிம் சமூகத்திற்குப் பரிசுக்கூடை மற்றும் ரிம50 மதிக்கத் தக்க பற்றுச்சீட்டு வழங்கப்பட்டன என எம்.பி.எஸ்.பி உறுப்பினர் டேவிட் மார்ஷல் கூறினார்.

பிறை சட்டமன்ற சேவை மைய ஏற்பாட்டில் கட்ட கட்டமாக நடைபெறும் இந்நிகழ்ச்சி மே மாதம் 21 முதல் 23 வரை நடைபெறுகிறது.


இந்நிகழ்ச்சியில் நகராண்மைக் கழக உறுப்பினர் ஜேசன் ராஜ், தாமான் சுப்ரிம் கம்போங் நிர்வாக செயல்முறை கழத் தலைவர் பராம் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் ப.இராசாமி இன்று தாமான் சுப்ரிம் எம்.பி.கே.கே அரங்கில் நடைபெற்ற பரிசுக்கூடை வழங்கும் நிகழ்ச்சியில் 95 முஸ்லிம்களுக்கு பரிசுக்கூடை மற்றும் பற்றுச்சீட்டு வழங்கினார்.