புதிய மலேசியா ஆட்சியில் மக்கள் வரிப்பணம் முறையாக பகிர்ந்தளிக்கப்படுகிறது – இராயர்

rbt

ஜெலுந்தோங் புதிய மலேசியா ஆட்சியில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தகுந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதன் மூலம் வசதி குறைந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடிகிறது. பொது மக்களின் வரிப்பணம் மற்றும் சாக்காட்பணம் முறையாக பகிர்ந்தளிக்கப்படுவதே இதற்குச் சான்றாகத் திகழ்கிறது,” என பள்ளிச்சீருடை வழங்கும் நிகழ்வில் இவ்வாறு தெரிவித்தார் ஜெலுந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர்.

பொது மக்கள் பினாங்கு மாநில அரசிற்கும் நம்பிக்கை கூட்டணி ஆட்சிற்கும் ஆதரவு நல்கியதன் பயனாக இன்று புத்ரா ஜெயாவில் புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. எனவே பொது மக்களுக்கு நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளேன் என மேலும் கூறினார். வருகின்ற ஜனவரி 1-முதல் மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கு பினாங்கு மாநில இரண்டு பாலங்களுக்கான கட்டணம் அகற்றப்பட்டது என அகம் மகிழ குறிப்பிட்டார்.

2019-ஆம் ஆண்டு முதல் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கானப் பள்ளிச் சீருடை வழங்கப்படுகிறது என்றால் மிகையாகாது. இவ்வாண்டு ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி என 600 மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்குப் பற்றுச்சீட்டு கொடுக்கப்பட்டன. ஜெலுந்தோங் தொகுதியைச் சார்ந்த 600 மாணவர்களுக்கு ரிம155 மதிக்கத்தக்க பற்றுச்சீட்டு வழங்கப்பட்டன. இந்தப் பற்றுச்சீட்டுப் பயன்படுத்தி பள்ளிச்சீருடை, காலணி, புத்தகப்பை, காலுரை மற்றும் முஸ்லிம் பெண் மாணவர்களுக்கு முக்காடு பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஆண்டு ரிம104,000 நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டன. வரும் காலங்களில்அதிகமான மாணவர்களுக்கும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்படும் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர்.

இந்நிகழ்விற்கு பத்து லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் ஒங் ஹ தியோங், சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம், இசான் இளைஞர் சமூகநலச் இயக்கத் தலைவர் முகமது அஷ்ராப் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பினாங்கு நீரழிவு சங்க ஒத்துழைப்புடன் மருத்துவப் பரிசோதனையும் இடம்பெற்றது. பொது மக்கள் இலவசமாக இப்பரிசோதனையில் கலந்து கொண்டனர்.