பெண்கள் பொருளாதாரச் சக்தியை உருவாக்க வேண்டும் – பேராசிரியர்

Admin
பேராசிரியர் ப.இராமசாமி நிகழ்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளருக்கு நற்சான்றிதழ் வழங்கினார்

பிறை பெண்கள் வியாபாரத் துறையில் ஈடுபட்டு பொருளாதாரச் சக்தியை உருவாக்க வேண்டும் என பினாங்கு மகளிர் பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்குநிறைவு விழாவில் கலந்து கொண்ட மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கூறினார். மேலும் இக்காலக்கட்டத்தில் பல்கலைக்கழகத்தில் 60 விழுக்காட்டினர் பெண்கள் மேற்கல்வி தொடர்வதோடு அரசுத் துறைகளிலும் அதிகமாக பெண்கள் தான் பணியில் அமர்த்தப்படுகின்றனர். முன்பு பெண்கள் வீட்டில் இருந்து கொண்டு குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொள்வர். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் குடும்பத்தை மட்டுமின்றி வேலை செய்தல் அல்லது வியாபாரத்துறையிலும் அங்கம் வகிக்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வு இரண்டாம் துணை முதல்வர் அலுவலகம், மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு மற்றும் பினாங்கு தாமரை மகளிர் மேம்பாட்டு சங்கம், தாமான் சாய் லெங் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றக் கழக இணை ஏற்பாட்டில் இனிதே நடைபெற்றது.

இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இக்கருத்தரங்கில் வியாபாரத் துறை நுணுக்கங்கள், பினாங்கு மேம்பாட்டுக் கழகம் வழங்கும் கடனுதவித் திட்டம், செபராங் ஜெயா நகராண்மைக்கழக வணிக உரிமம், மின்வணிகம் ஆகியவை பட்டறையில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வியாபாரத் துறை வழங்கும் வாய்ப்புகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் பற்றிய உரையை மிகச் சிறப்பாக பேச்சாளர் திரு.ராஜ் மோகன் பேசினார். மேலும் பெண்களுக்கு கைத்தொழில் ஊக்குவிக்கும் பொருட்டு மருதாணி வரையும் பயிற்சியும் இடம்பெற்றன. பேராசிரியர் ப.இராமசாமி நிகழ்வில் கலந்து கொண்ட 50 பங்கேற்பாளர்களுக்கும் நற்சான்றிதழ் கொடுத்தார்.

இந்நிகழ்வில் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான டேவிட் மார்ஷல், ஜெசன் ராஜ், தாமான் சாய் லெங் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் துரைசிங்கம், தொழிலதிபர் டத்தோ செளந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.