பிறை – வருகின்ற புதன்கிழமை நடைபெறும் மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில், பொதுத்துறைக்கான வீட்டிலிருந்து பணிபுரியும் (WFH) ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும்.
“எல்லா துறைகளின் பணிகளும் தொலைதூரப் பணிக்கு ஏற்றவை அல்ல. மேலும், சேவை வழங்குதலை பாதிக்காமல் எந்த பதவிகளில் நெகிழ்வான பணிமுறைகளைப் பயன்படுத்தலாம் என்பதை மாநில அரசு கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்,” என்று முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் கூறினார்.
தனியார் துறை பொருத்தமட்டில், சொந்தப் பரிசீலனைகளை கொண்டு முடிவுகளையும் எடுக்கும் என்று சாவ் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நிலவும் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் மாநிலத்தின் தயார்நிலை குறித்துப் பேசிய சாவ், தற்போதைய கவனம் மாநிலத்தின் நீர் விநியோகத்தின் மீது உள்ளது என்றும், குறிப்பாக கெடா மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்றும் கூறினார். ஏனெனில், பினாங்கின் மூல நீர் ஆதாரம் சுங்கை மூடாவிலிருந்து வருகிறது.
கெடாவில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள் மாநிலத்தினை பாதிக்கக்கூடும் என்று சாவ் குறிப்பிட்டார், அதே நேரத்தில், ஒட்டுமொத்த நிலைமை கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றும் அவர் உறுதியளித்தார்.
“எங்கள் அணைகளில் உள்ள நீர்மட்டம் சீரான நிலையில் உள்ளது. சுங்கை மூடா ஆற்றை நெருக்கமாக கண்காணிக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், தற்போது ஆற்றின் நீர்மட்டம் சீராகவே உள்ளது; அது இன்னும் அபாய நிலையை எட்டவில்லை,” என்று அவர் கூறினார்.