மாநில அரசு மனிதமூலதன வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கும் – முதல்வர்

Admin

செபராங் பிறை – ” உயர்க்கல்வி மையங்கள், கல்லூரி மற்றும் தொழிற்கல்வி மையங்களில் பயிலும் மாணவர்கள் நிபுணத்துவம் மிக்க மனிதமூலதனமாக உருவாகி மாநில சமூகபொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிய வேண்டும். தற்போது கூட்டரசு அரசாங்கம் பல்வேறு முகவர்களுடன் இணைந்து வேலை வாய்ப்பு கிடைக்காத பட்டதாரிகளுக்கு தனியார் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு தொழிற்பயிற்சியும் கொடுத்து நிபுணத்துவம் கொண்ட தொழிலாளர்களாக உருவாக்குகின்றனர். 

“மேலும் மேற்கல்வி தொடர வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சிகள் கற்பதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இம்மாநிலத்தின் ஒவ்வொரு மாணவர்களும் நிபுணத்துவம் மிக்க மனிதமூலதனமாக உருவாகி  சிறந்த வேலை வாய்ப்புகள், கூடுதல் வருமானம் கிடைக்கப்பெற்று மாநில பொருளாதார வளர்ச்சிக்கு முன்னெடுத்துச் செல்வர்,” என உயர்க்கல்வி நுழைவுக்கட்டணம் செலுத்துவதற்கான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக கொடுக்கப்படும்  உயர்க்கல்வி நுழைவுக்கட்டணம் செலுத்துவதற்கான ஊக்கத்தொகை, தொடக்கத்தில் ரிம500 வழங்கப்பட்டு இன்று ரிம1,000 மற்றும் ரிம1,200 என ஒவ்வொரு பிரிவுக்கேற்ப அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு வழங்கும் சமூகநலம் சார்ந்த திட்டங்களில்  கூட்டரசு அரசாங்கத் திட்டங்களுடன் ஒன்றிணையும் திட்டங்கள் தொடரப்படாது குறிப்பாக தங்க மாணவர்கள் திட்டம் மற்றும் ‘I Love Penang’ சுகாதார அட்டை என முதல்வர் தெரிவித்தார். எனினும் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரிம5மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கி சமூகநல திட்டங்கள் (i-sejahtera) தொடரப்படும் என விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் மத்திய செபராங் பிறை மாவட்ட அதிகாரி கமாருல் ஹைசால் பின் கொடெராட் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு மத்திய செபராங் பிறை மாவட்டத்தைச் சேர்ந்த 543 மாணவர்களுக்கு உயர்க்கல்வி நுழைவுக்கட்டணம் செலுத்துவதற்கான ஊக்கத்தொகை செபராங் பிறை அரேனா அரங்கத்தில் இன்று வழங்கப்பட்டன. மாநில அரசு மொத்தமாக ரிம540,800 மானியத்தை இவ்வட்டார 2019/2020 தவணைக்கான உயர்க்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்கியுள்ளது பாராட்டக்குறியதாகும்.