அட்வெண்தீஸ் மருத்துவமனையின் மருத்துவ தொண்டு நிதிகள் பலரின் உயிர்களைப் பாதுகாக்கிறது.

Admin

“கடவுள் எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்தார். ” என வாழ்க்கையில்  எதிர்நோக்கிய சில  சம்பவங்களில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த இரு நபர்களிடம் இருந்து உச்சரிக்கப்பட்டது.

கடுமையான இருதய நோயால் பாதிக்கப்பட்ட  வித்யகுமாரா,42 இந்நோயினால் அனுபவித்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, என்றார். ஆயினும், அவரைச் சுற்றியுள்ள உறவுகளின் ஆதரவினால், சிகிச்சையின் போது அவர் குணமடைந்தது சாத்தியமானது.

நான்கு குழந்தைகளுக்கு தந்தையான தொழில்நுட்ப வல்லுநர் வித்யகுமாரா, 2017-ஆம் ஆண்டில் தான் முதலில் மார்பு வலியை அனுபவித்ததாகவும், நோய் இருப்பது உறுதி செய்யப்படுவதற்கு முன்பு, செபராங் ஜெயா மருத்துவமனையில் ஒரு மருத்துவரை அணுகியதாகவும் கூறினார்.

“செபராங் ஜெயா மருத்துவமனையின் மருத்துவர் ஆலோசனைக்கு பிறகு, ‘கரோனரி அர்தரி ஸ்டென்ட்’ பொருத்துவதற்காக பினாங்கு மருத்துவமனைக்குச் செல்ல எனக்கு அறிவுறுத்தப்பட்டது.

“இந்த சிகிச்சைக்குப் பின் எனது உடல் நலம் நன்றாக இருந்தது. ஆனால் 2019 இன் பிற்பகுதியில், எனது உடல்நிலை மோசமடைந்தது. நான் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன்.  என் இதயத்தில் நான்கு அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.

“எனது உடல்நிலை காரணமாக,
விரைவான சிகிச்சை பெற
மற்ற மருத்துவமனைகளை அணுகுமாறு அரசு மருத்துவமனையில்  அறிவுறுத்தப்பட்டது.

“நானும் எனது குடும்பத்தினரும் அடுத்து எங்குச் செல்வது என்று கலங்கிக்கொண்டிருந்தபோது, எனது நண்பர் ஒருவர் பினாங்கு அட்வென்டிஸ்ட் மருத்துவமனைக்குச் செல்லுமாறு பரிந்துரைத்தார்.

இந்த மருத்துவமனையில் குறிப்பிட்ட நோய்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்”, என்று வித்யகுமாரா  பினாங்கு அட்வென்டிஸ்ட் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

இம்மருத்துவமனையில் வழங்கப்படும் நான்கு நிதியுதவியில்  ஒன்றான இருதய நோய்க்கான நிதியில் இருந்து உதவி பெறப்பட்டது.
இந்த உதவிக்கான விண்ணப்பம் ஆவணங்கள் கொடுத்த பிறகு அவரது முழு மருத்துவ செலவுக்கான ரிம 50,000 கிடைக்கப்பெற்றது. ஒரே வாரத்தில் அனைத்து நடவடிக்கைகளும் முடிவுற்ற பின்னர் 2020-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறையை (angioplasty procedure) மேற்கொண்டார்.

பிற பினாங்கு அட்வெண்தீஸ் மருத்துவமனையின் மருத்துவ தொண்டு நிதிகள், டாக்டர் ஜே. ஏர்ல் கார்ட்னர் நிதி, புற்றுநோய் நிதி மற்றும் சமூகநல நிதியம் ஆகும்.

“மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, நான் ஒரு புதிய மனிதனைப் போல உணர்ந்தேன். இப்போதெல்லாம், நான் வாரத்திற்கு இரண்டு முறையாவது உடற்பயிற்சி செய்கிறேன்.

“நான் இப்போது ஆரோக்கியமான உணவு உட்கொள்கிறேன், ஏனென்றால் மருத்துவர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

“நான் இப்போது வேலைக்குத் திரும்ப முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது ஐந்து வயது இளைய மகன் உட்பட எனது குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பு கொண்டுள்ளேன்.

“சிறந்த மருத்துவ சேவையை வழங்குவதற்காக மட்டுமல்லாமல், முழு மருத்துவ செலவுகளையும் ஈடுசெய்ததற்காக பினாங்கு அட்வெண்தீஸ் மருத்துவமனைக்கு எனது நன்றிகள், ”என்று அவர் கூறினார்.

மற்றொரு  புற்றுநோய் நோயாளியான  ஹெங் சீவ் கிம்,63 இந்த மருத்துவமனையின்  மருத்துவ உதவி மூலம் வாழ இரண்டாவது வாய்ப்பை வழங்கியதற்காக நன்றியை தெரிவித்தார்.

ஹெங் 2014 இல் கர்ப்பப்பை புற்றுநோயால் (முதல் நிலை) பாதிக்கப்பட்டுள்ளார், அதே ஆண்டில் கர்ப்பப்பை அகற்றினார்.

“எனது கருப்பப்பை அகற்றப்பட்ட பிறகு, 2019 ஆம் ஆண்டு வரை வாழ்க்கை சாதாரணமாக இருந்தது, நான் முதன்முதலில் என் சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதை உணர்ந்தேன்; அதன் பின்னர், புற்றுநோய் மீண்டும் வந்தது.

“ ஒரு கிளினிக்கை அணுகிய போது அவர்கள் என்னை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர், ஆனால் பண வசதி குறைவாக இருந்ததால், எனது நண்பர் ஒருவர் என்னை பினாங்கு அட்வெண்தீஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தார், ”என்று ஹெங் கூறினார்.

பினாங்கில் உணவக பணியாளராக பணிபுரியும் ஹெங், புற்றுநோய் நிதியத்தின் கீழ் 2020 இல் கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் மூச்சுக்குழாய் சிகிச்சை பெற்றார். இவரின் சிகிச்சைக்கு இந்த நிதியில் இருந்து மொத்தம் ரிம46,914 வழங்கப்பட்டது.

நேர்காணலின் போது பினாங்கு அட்வெண்தீஸ் மருத்துவமனை தொண்டு மேலாளர் ஜென்னி ஓய், மருத்துவ நல அலுவலர்கள் தபிதா ஆண்ட்ரூஸ் மற்றும் எரிக் லோ ஆகியோர் கலந்து கொண்டனர்.