இந்தியர்களின் நலனுக்காக பாடுப்பட்டவர் பேராசிரியர்  – மாநில முதல்வர் புகழாரம்.

பிறை – பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை பறைச்சாற்றும் வகையில் இன்று தெ லைட் தங்கும்விடுதியில் ‘பாக்கு மர தீவில் தேக்குமர தலைவன்’ என்ற நூல் அதிகாரப்பூர்வ வெளியீடுக் கண்டது. இந்நிகழ்வினை பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி
வைத்தார்.

பேராசிரியர் ப.இராமசாமி வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் நூலை மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் வெளியீடு செய்தார்.

2008-ஆம் ஆண்டு பிறை சட்டமன்ற தொகுதியிலும் பத்து காவான் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு வெற்றிக் கண்டு முதல் முறையாக மலேசிய வரலாற்றில்   பினாங்கு இரண்டாம் துணை முதல்வராக பேராசிரியர் ப.இராமசாமி பதவியேற்றார். அதன் பின்னர், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

“தாம் பதவியேற்ற காலத்தில் இருந்து இன்று வரை இம்மாநில இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்ததோடு அதற்கான தீர்வைக்காண போராடி வெற்றியும் கண்டுள்ளார்”, என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் புகழாரம் சூட்டினார். இம்மாதிரியாக சமுதாயத்திற்காக பாடுப்படும் போராட்டவாதிக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்த இதன் ஆசிரியர் செ.குணாளன் அவர்களை முதல்வர் பாராட்டினார்.

இதனிடையே, பொருளாதார திட்டமிடல், கல்வி, மற்றும் மூலதன வளர்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி இம்மாநில தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்றால் மிகையாகாது. இதனைத் தொடர்ந்து, பினாங்கு மாநில இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில்திறன் கல்விக்கு பேராசிரியர் புத்துயிர் அளித்துள்ளார். ஜெர்மன் இரட்டைக் கல்வி திட்டத்தின் மூலம் அதிகமான இளைஞர்கள் கல்வி பயில்வதோடு தொழில்திறனையும் கற்கின்றனர். இதன்மூலம், திறன்
மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதோடு பினாங்கு மாநில வளர்ச்சிக்கு ஒரு மையக்கல்லாக அமையும் என மாநில முதல்வர் தமதுரையில் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரின் இந்த வாழ்க்கை வரலாறு நூல் பல இளைஞர்களுக்கும் பாடமாகவும் முன்னோடியாகவும் அமையும் என மாநில முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.