இந்திய மாணவர்கள் உபகாரச் சம்பளம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம்

பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுக்கோளாகத் திகழ்கிறது. அவ்வகையில் இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களுக்கு ஏழாவது ஆண்டாக தொடர்ந்து உபகாரச் சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஆண்டுக்கான உபகாரச் சம்பளம் பெறுவதற்கு பினாங்கு வாழ் இந்திய மாணவர்கள் வரும் 20/2/2017 முதல் 31/3/2017 வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பப் பாரங்களை இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மாணவர்கள் www.hebpenang.gov.my என்ற இந்து அறப்பணி வாரிய அகப்பக்கத்தின் வழி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு உபகாரச் சம்பளம் பெற்ற மாணவர்களும் விண்ணப்பம் செய்யலாம் என்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி. விண்ணப்பதாரர்கள் சரியான விபரங்களை கொண்டு விண்ணப்பிக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

சான்றிதழ், டிப்ளோமா, இளங்கலை ஆகிய மேற்கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றனர். தேர்வுப் பெற்ற ஒவ்வொரு மாணவரும் அவரவரின் கல்வி தகுதிக்கேற்ப உபகாரச் சம்பளம் பெறுவர் . இவ்வாண்டு பினாங்கு திறன் மேம்பாட்டு மையத்தில் மேலும் அதிகமான இந்திய மாணவர்கள் செயல்திறன் கல்வியை பயில அனுமதிக்கப்படுவர் என கூறினார்.

இந்து அறப்பணி வாரியம் மாநில அரசு வழங்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி மாணவர்களின் கல்வி சுமையைக் குறைக்க வழங்குகின்றனர். கடந்த ஆண்டு 309 இந்திய மாணவர்களுக்கு ரிம614,923 லட்சம் வழங்கப்பட்டது பாராட்டக்குறியதாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்து அறப்பணி வாரியம் அதிகமான மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்குகிறது என்றால் மிகையாகாது.