இந்து ஆலய சிலை உடைப்பு, தீவிர விசாரணை வேண்டும் – தே லாய் எங்

ஆலயத் தலைவர் திரு.மைக்கில் அந்தோணி மற்றும் அர்ச்சகர் சேதப்படுத்தப்பட்ட தெய்வ உருவ சிலையை கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் எங்கிடம் காண்பிக்கின்றனர்.

பினாங்கில் மீண்டும் இந்து ஆலயத்தில் தெய்வ சிலை உடைப்பு ஏற்பட்டது. ஜாலான் தீமாவில் அமைந்துள்ள ஶ்ரீ ராஜ மதுரை வீரன் ஆலயத்தில் வீற்றீருக்கும் 3 தெய்வ உருவ சிலைகள் மர்ம ஆசாமிகளால் கடந்த நவம்பர் 14-ஆம் திகதி உடைக்கப்பட்டன. அன்றைய தினம் மாலையில் ஆலயத்திற்கு வந்த ஆலயத்தலைவர் திரு.மைக்கல் அந்தோனி இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை கண்டு உடனடியாக காவல் துறையிடம் புகார் அளித்ததாக கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“இத்தகாத செயலின் பின்னணிப் பற்றி சுய அனுமானம் கொள்ளாமல், காவல் துறை விரைவில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்யும்” என ஆலயத்திற்கு நேரில் வருகையளித்த கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் எங் கூறினார்.

இந்தச் சம்பவம் மீண்டும் தொடராது என தாம் நம்புவதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஆலய தெய்வ உருவ சிலைகள் மீண்டும் மறுசீரமைப்பு செய்வதற்கு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி ஒதுக்கீட்டிலிருந்து ரிம2,000 உதவிதொகை வழங்குவதாக அறிவித்தார். இந்த ஆலய பாதுகாப்பு மற்றும் இடமாற்றம் குறித்து இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமியிடம் கலந்துரையாட எண்ணம் கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.