இன வேற்றுமை பாராத  டத்தோஸ்ரீ ஆர்.ஏ நற்பணிக்குழுவினரின் சேவை பாராட்டக்குரியது-முதல்வர்

 

பட்டர்வொர்த் – டத்தோஸ்ரீ ஆர்.ஏ. அருணாசலம் அவர்களின் நற்பணிக்குழுவினரும் எஸ்.பி.யு சமூகநலத்துறையும் இணைந்து 40-வது முறையாக வசதி குறைந்தவர்கள் மற்றும் உடல் பேறு குறைந்தவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசுக்கூடை மற்றும் மூக்குக்கண்னாடி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

“டத்தோ ஆர்.ஏ அருணாசலம் நற்பணிக்குழுவினர் 1979-ஆண்டு முதல் இடைவிடாது ஆற்றி வரும் இந்த தொண்டு நடவடிக்கை மலேசிய சாதனைப் புத்தகத்தில் பதவுச் செய்யலாம்.

 

“ஒவ்வொருவரும் தங்கள் பொருளாதார வசதிக்கு ஏற்றவாறு வசதிக் குறைந்த சமூகத்தினருக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். பொருளாதார வசதிக் கொண்டவர்கள் வசதிக் குறைந்த மக்களுடன் பகிர்ந்து கொள்வது அனைவருக்குமான சிறந்த முன்னுதாரணம்,” என தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு தனிநபர் மற்றும் குடும்பத்தினர் 40 வருடங்களாகத் தொடர்ந்து பல்லின மக்களுக்கு உதவும் வகையில் தொண்டு நடவடிக்கை நடத்தி வருவது எளிதான காரியம் அல்ல என்று முதல்வர் புகழாரம் சூட்டினார்

இந்நிகழ்வில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ, ஒன் ஒப் தொண்டு மற்றும் சமூகநல பெர்ஹாட் அமைப்பின் தலைவர் டத்தோ சுவா சுய் அவ், மலேசிய இந்தியர் வர்த்தகர் தொழிலியல் சங்கம், பினாங்கு மாநிலத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

டத்தோஶ்ரீ அருணாசலம் ஏற்று நடத்தும் இன வேற்றுமை பாராத இந்நிகழ்வில் ஏறக்குறைய 500 பல்லின வசதி குறைந்த மக்களுக்கு பரிசுக்கூடை (மளிகைப் பொருட்கள்), கண் பார்வை பாதிக்கப்பட்ட 500 பேருக்கு மூக்குக்கண்ணாடியும் இலவசமாக வழங்கப்பட்டன.

“வசதிக் குறைந்த பொது மக்களுக்குப் பரிசுக்கூடை மற்றும் மூக்குக்கண்ணாடி வழங்குவதன் மூலம் அவர்களின் பொருளாதார சுமையைக் குறைக்க முடியும். மேலும் தீபத் திருநாளை முன்னிட்டு பல்லின மக்களுக்கும் வழங்கப்படும் இவ்வுதவி போற்றத்தக்கது,” என மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.

பொது மக்கள் தங்ககின் பெருநாள் கொண்டாட்டத்தின் போது திறந்த இல்ல உபசரிப்பு நடத்துவதன் மூலம் மலேசிய மக்களின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலோங்கச் செய்யலாம், என்றார்.

செய்தி:ரேவதி கோவிந்தராஜு

படம் : அமாட் அடில் முகாமட்