இரு ஊராட்சி மன்றங்களுக்கும் நிதி வழங்க பரிசீலிக்கப்படும் – ஜெக்டிப்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு இரு ஊராட்சி கழகங்களுக்கும் (பி.பி.தி) தற்போதைய மதிப்பீட்டு வரி வருவாய்க் குறைந்துள்ளதை முன்னிட்டு அடுத்த ஆண்டு செலவினங்களுக்காக தள்ளுபடி வழங்கிய நிதி மீண்டும் திரும்பி வழங்குவது குறித்து பரிசீலிக்கும்.
14-ஆவது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் இரண்டாவது தவனை இரண்டாவது கூட்டத்தில் மச்சாங் புபோக் சட்டமன்ற உறுப்பினர் லீ கை லூனின் கூடுதல் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது வீட்டுவசதி, உள்ளாட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோ இவ்வாறு தெரிவித்தார்.

“இது தொடர்பாக நாங்கள் இன்னும் ஒரு முடிவை எடுக்க வில்லை. தேவைப்பட்டால், நாங்கள் இரு உள்ளூர் அதிகாரிகளுக்கும் தள்ளுபடிகள் வழங்க அனுமதிப்போம், ” என்று அவர் இங்குள்ள ஸ்ரீ பினாங் அரங்கத்தில் பதிலளித்தார்.

முன்னதாக, தற்போதைய மதிப்பீட்டுக்கு ஏற்ப மதிப்பீட்டு வரி விகிதம் அதிகரிக்கப்படாவிட்டால் பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஆகிய வருடாந்திர வருவாய் குறைய வாய்ப்புண்டு என்று கை லூன் கவலை தெரிவித்தார்.

அக்கேள்விக்கு பதிலளித்த ஜெக்டிப், எம்.பி.பி.பி மதிப்பீட்டு வரி வருவாய் வசூலின் அசல் திட்டத்தில் ரிம54.42 மில்லியன் கணக்கிடப்பட்ட வேளையில் அதின் புதிய மதிப்பீட்டு வரி வருவாய் வசூலிப்பு ரிம19.53மில்லியன் மட்டுமே பெறுகிறது.
ஜெக்டிப் கூறுகையில், செபராங் பிறை மாநகர் கழகத்தின் அசல் மதிப்பீட்டு வரி வருவாய் வசூல் ரிம27.85 மில்லியன் ஒப்பிடும்போது புதிய மதிப்பீட்டு வரி வருவாய் வசூல் ரிம37.75 மில்லியனாக மட்டுமே இடம்பெறுகிறது.

“கடந்த ஆண்டு மதிப்பீட்டு வரி வருவாய் அதிகரிப்பு குறித்து மறுஆய்வு மேற்கொண்டோம், ஆனால், ஊராட்சி சட்டத்தின் (1976) கீழ், முன்மொழியப்பட்ட மதிப்பீட்டு வரி விகித அதிகரிப்பு குறித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க இடமுண்டு.

“பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட எதிர்ப்பு புகார்களில் கோவிட்-19 ஒரு முக்கிய காரணியாக விளங்கியது.

“மதிப்பீட்டு வரி அதிகரிப்பு குறித்து பல தரப்பினரின் கருத்துகள் கலந்தாலோசிக்கப்பட்டதில் தற்போது இரு ஊராட்சி மன்றங்கள் அந்நிதி சுமையை ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது,” என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் இவ்வாறு பதிலளித்தார்.