இளம் வாக்காளர்கள் வாக்களிக்க முன் வர வேண்டும் – சாவ்

Admin

 

பிறை – பத்து காவான் நாடாளுமன்ற வேட்பாளர் சாவ் கொன் இயோவ், இன்று இளம் வாக்காளர்களைச் சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

 

இந்நாட்டின் எதிர்காலம் வருங்கால சந்ததியினரின் கைகளில் இருக்கிறது. எனவே, இளைஞர்கள் வருகின்ற நவம்பர்,19 ஆம் தேதி வாக்களிக்க செல்ல வேண்டும் என்று  பிறை, ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அரங்கில் நடைபெற்ற
பிரச்சாரத்தில் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

“இன்று இளம் வாக்காளர்களுடன் சிறிது நேரம் செலவிடும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

“நீங்கள் அனைவரும் அறிந்தது போல பினாங்கின் வளர்ச்சி செபராங் பிறை, குறிப்பாக பத்து காவானில் உள்ளது.

“தீவின் துரித மற்றும் நிலையான வளர்ச்சிகள் செபராங் பிறையும் மேம்பாடுக் காண வழிவகுக்கிறது. மேலும், பினாங்கு மாநிலத்தில் எல்லா இடங்களிலும் துரித வளர்ச்சி அடைந்து வருவதை மறுப்பதற்கில்லை.

“36 ஆண்டுகளுக்கு முன்பு, நான் முதன்முதலில் அரசியல் களத்தில் கால் தடம் பதிக்கும் போது தஞ்சோங்கில் போட்டியிட்டேன். பின்னர், மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக உள்ளாட்சித் துறையை மேற்பார்வையிட்டு தற்போது மாநில முதல்வராக பணியாற்றி அரசியல் துறையில் நீண்ட காலம் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

“இப்போது, ​​பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு நம்பிக்கைக்குரிய தொகுதி, குறிப்பாக நாம் இங்கு தொழில்துறை வளர்ச்சியைக் கண்கூடாக காண முடிகிறது.

“பத்து காவானில் உள்ள முக்கிய பகுதிகளைச் சுற்றி தினமும் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் பரப்புரைகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும், தேர்தல் பிரச்சார காலம் முடிவதற்கு சில நாட்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால், பல இடங்களை நாங்கள் தவறவிடக்கூடும்.

“ஆயினும், நாங்கள் முக்கியமான பகுதிகளுக்குச் சென்று உள்ளூர் மக்களுடன் சிறப்பான தருணங்களைப் பகிர்ந்து கொண்டோம், குறிப்பாக இத்தொகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் சவால்களை அறிய முடிந்தது,” என்று சாவ் தனது உரையில் கூறினார்.

“மேலும், ஒளிமயமான எதிர்காலத்திற்காக மலேசியாவை இலஞ்ச ஊழல் கொண்ட அரசாங்கத்திடம் இருந்து மீட்டெடுக்கவும், மீட்சிப் பெறவும், மேன்மையடையவும்,” வாக்களிக்க திரளாக வருமாறு இளம் வாக்காளர்கள் உட்பட பொது மக்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

மத்திய அரசாங்கத்தால் பினாங்கு மாநிலத்தின் பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்த பல முறை நிராகரிக்கப்பட்டதையும் பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.

இதுவரை நடந்த பிரச்சாரம் முழுவதும், புத்ரா ஜெயாவை கைப்பற்ற பக்காத்தான் ஹராப்பானுக்கு இரண்டாவது முறை வாய்ப்பு வழங்குமாறு சாவ் தொடர்ந்து மக்களிடம் வலியுறுத்துகிறார். இதன்வழி, பினாங்கு மட்டுமின்றி மலேசிய முழுவதும் புதிய மாற்றத்தையும் பொருளாதார ரீதியில் வளர்ச்சி மட்டுமின்றி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முடியும் என சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.