பட்டர்வொர்த் – பாகான் டாலாம் இளைஞர் விழா 2026, ஜூலை 25 முதல் 26 வரை இரு நாட்களுக்கு லோரோங் பாகான் லுவார் டுவாவில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டு, இளைஞர்கள், குடும்பங்கள், தொழில்முனைவோர் மற்றும் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து படைப்பாற்றல், தொழில்முனைவு மற்றும் சமூக ஒற்றுமையை கொண்டாடினர்.

பாகான் டாலாம் சட்டமன்ற இளைஞர் செயற்குழுவினர் (JBPP) ஏற்பாட்டில், போப்பி மார்கெட் (Popipop Market) மற்றும் ‘GohKaki Childhood Museum’ இணை ஏற்பாட்டில், பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சேவை மையம் மற்றும் கம்போங் பெங்காலி எம்.பி.கே.கே ஆதரவுடன் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கீன் மற்றும் எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் லிங்கேஸ்வரன் சர்மர் ஆகியோரும் கலந்து கொண்டு இளைஞர் மேம்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர் பங்கேற்று, தங்களது தயாரிப்புகள் மற்றும் வணிகங்களை அறிமுகப்படுத்தவும், உள்ளூர் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பைப் பெற்றனர்.

மேலும், இந்திய, தாய்லாந்து மற்றும் கொரிய உணவு வகைகள் உட்பட பல்வேறு உணவுகள் பார்வையாளர்களை கவர்ந்தன. கேரம், பல்லாங்குழி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றதுடன், குறிப்பாக ‘சிறியோருக்கான விளையாட்டு பகுதி’ மூலம் பல்வேறு தலைமுறையினரும் ஒன்றிணைந்து தங்களது சிறுவயது நினைவுகளை மீட்டெடுக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்டமன்ற குமரன், இளைஞர்களின் வளர்ச்சிக்கு எப்போதும் தொடர்ந்து ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டதுடன், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தவும், அவர்களின் எதிர்கால வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் முக்கியப் பங்காற்றுவதாகத் தெரிவித்தார்.
இளைஞர்கள், குடும்பங்கள், தொழில்முனைவோர் மற்றும் உள்ளூர் மக்களை ஒன்றிணைத்து, பாகான் டாலாம் தொகுதியை துரித வளர்ச்சி, படைப்பாற்றல் மிக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக உருவாக்கும் முயற்சிகளுக்கு இவ்விழா சிறந்த தளமாக அமைந்தது.
மேலும், இவ்விழா வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பங்களிப்பு வழங்கிய ஏற்பாட்டாளர்கள், இணை ஏற்பாட்டாளர்கள், விற்பனையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இளைஞர்களின் வளர்ச்சி, உள்ளூர் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதற்கு பாகான் டாலாம் இளைஞர் விழா போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஆதரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.