ஊராட்சி மன்றங்களின் வணிக வளாகங்களுக்கான வாடகைக் கட்டணம் உயர்த்தப்படாது – ஜேசன்

Admin
img 20260514 wa0040

ஜார்ச்டவுன் – பினாங்கில் உள்ள இரு ஊராட்சி அமைப்புகளான பினாங்கு மாநகர் கழகம் (எ.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வணிக வளாகங்களுக்கான நடப்பு வாடகை கட்டணங்களை தற்போதைக்கு உயர்த்தபடாது என அறிவித்துள்ளது.

 

பினாங்கு ஊராட்சி மற்றும் நகர்ப்புற மற்றும் புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹெங் மூய் லைய் கூறுகையில், தற்போதைய வாடகை கட்டணங்கள் இன்னும் சந்தை விலைகளை விட குறைவாகவும் நியாயமானதாகவும் உள்ளது என தெரிவித்தார்.

“சந்தை மற்றும் கடை வளாகங்களுக்கான வாடகை ரிம6 முதல் ரிம300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவக வளாகங்களுக்கான வாடகை ரிம8 முதல் ரிம800 வரை உள்ளது.

“சிறு வியாபாரிகள் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கு சுமை ஏற்படாத வகையில் வாடகை உயர்த்தப்படாது,” என்று அவர் தெரிவித்தார்.

 

மேலும், ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள வணிக வளாகங்களுக்கான கட்டணங்கள் பொதுமக்களுக்கு ஏற்ற விலையில் தொடரும் வகையில் மாநில அரசு அக்கறையுடனும் செயல்திறனுடனும் அணுகி வருவதாக கூறினார்.

இதற்கிடையில், புதிய ‘ஹாக்கர்’ மைய கட்டுமானப் பணிகள் தற்போது 4.16% நிறைவடைந்துள்ளதாகவும், 2027ஆம் ஆண்டு முதல் காலாண்டில் இத்திட்டம் நிறைவடையும் எனவும் எழுப்பிய கேள்விக்கு ஜேசன் இவ்வாறு
பதிலளித்தார்.

புதிய ‘ஹாக்கர்’ மையத்தில் 17 சில்லறை கடைகள், 127 அங்காடி கடைகள், 7 பானக் கடைகள் மற்றும் 43 மொபைல் கியோஸ்க் இடங்கள் அமைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், முதலமைச்சர் வாரியம் (CMI) தற்போது கெர்னி பே பகுதியை நிர்வகித்து வருவதாகவும், புதிய ஹாக்கர் மையம் முடிந்த பிறகு முழு வளாகத்தையும் நிர்வகிக்க ஓர் இயக்குநர் நிறுவனம் நியமிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், தற்போது அப்பகுதியில் 93 வியாபாரிகளும்,பெர்சியாரான் கெர்னி சுற்றுவட்டாரத்தில் 12 தற்காலிக அங்காடி கடைகளும் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.