பெர்தாம் – பினாங்கு மாநிலம், துரித வளர்ச்சி காணும் புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திறன்மிக்க, எதிர்காலத் தயார்நிலை கொண்ட பணியாளர்களை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், மாநில அரசு, தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளது.
பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகையில், ஒருங்கிணைந்த சுற்றமைப்பு (IC) வடிவமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், பினாங்கு சிலிகான் டிசைன் @5km+ (PSD@5KM+) போன்ற பல முயற்சிகளை மாநில அரசு முன்னெடுத்து வருகிறது, என்றார்.
“அதேவேளையில், ‘Penang GenAI Initiative 2.0’ திட்டத்தின் மூலம் 2026ஆம் ஆண்டுக்குள் 500 Generative AI (உருவாக்க செயற்கை நுண்ணறிவு) திறமையாளர்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கு சிறந்த பணியாளர்களைத் தயார்படுத்த உதவும்.
“இந்த முயற்சிகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக மட்டுமல்ல. பினாங்கின் போட்டித்திறனை நீண்டகாலத்திற்கு நிலைநிறுத்தும் திறன்களை வளர்ப்பதற்கு துணைபுரியும்,” என்று அவர் இன்று கெபாலா பத்தாசில் உள்ள பெர்தாம் தொழில்நுட்ப பூங்காவில் நடைபெற்ற ஐ.என்.வி மெத்திரியல் டெக்னோலோஜி தனியார் நிறுவனம் மற்றும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஐ.என்.வி மெத்திரியல் டெக்னோலோஜி தனியார் நிறுவனம் தொழில்நுட்ப இயக்குநர் வாங் சீ, USM துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் அஸ்லான் அம்ரான் மற்றும் இன்வெஸ்ட் பினாங்கு திறன் மேம்பாட்டு திட்டங்களின் தலைவர் ஹவானி அட்னான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த புதுப்பிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த சாவ், இந்த கூட்டாண்மை திறமையாளர் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பில் வலுவான கவனம் செலுத்துவதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
“இது ஏற்கனவே இருந்த கூட்டாண்மையின் புதுப்பிப்பாக இருந்தாலும், இதன் முக்கியத்துவம் அதைவிட பெரியது. எதிர்கால பொருளாதாரத்திற்காக பினாங்கு தொடர்ந்து தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது பிரதிபலிக்கிறது.
“USM பட்டதாரிகளை INV நிறுவனம் பணியமர்த்துவது, கூட்டு ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வது ஆகியவை கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துகின்றன.
“இதன் மூலம் மாணவர்கள் தொழில்துறையின் உண்மையான தேவைகளை நெருக்கமாக அறிந்துகொள்ள முடியும். அதேசமயம், நிறுவனங்களுக்கும் திறமையான மனிதவளத்தைப் பெறும் வாய்ப்பும் கிடைக்கிறது,” என்றார்.
மேலும், பல்கலைக்கழகங்களுக்கும் தொழில்துறை நிறுவனங்களுக்கும் இடையிலான அர்த்தமுள்ள கூட்டாண்மைகள், பட்டதாரிகள் பொருத்தமான திறன்களும் அறிவும் பெற்றவர்களாக உருவாகவும், நிறுவனங்கள் துரித வளர்ச்சி காணும் தொழில்நுட்ப சூழலில் போட்டித்திறனுடன் நிலைத்திருக்கவும் அவசியமானவை என அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், பேராசிரியர் டாக்டர் அஸ்லான் அம்ரான், இந்த ஒத்துழைப்பு எதிர்காலத்தில் மேலும் பல ஆராய்ச்சி துறைகளுக்கு விரிவடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
“எதிர்காலத்தில் மேலும் பல கூட்டு ஆராய்ச்சி திட்டங்களை முன்னெடுக்க ஆவலுடன் உள்ளோம். USM-இன் பொருட்கள் மற்றும் கனிம வளப் பொறியியல் துறை, மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை, இரசாயன அறிவியல் துறை உள்ளிட்ட பல துறைகளில் வலுவான நிபுணத்துவம் உள்ளது.
“ஆராய்ச்சி மற்றும் புதுமை தொடர்பான அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் வரவேற்கிறோம். தொழில்துறை–கல்வி இணைப்பை வலுப்படுத்தி, இரு தரப்பிற்கும் பயனளிக்கும் கூட்டாண்மைகளுக்கு USM எப்போதும் திறந்த மனதுடன் வரவேற்கும்,” என்று அவர் கூறினார்.