எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற 313 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு 2021ஆம் ஆண்டுக்கான மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்) மற்றும் மலேசிய உயர்நிலைக்கல்வி சான்றிதழ் (எஸ்.டி.பி.எம்) ஆகிய அரசு பொதுத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற 313 மாணவர்களை அங்கீகரித்தது.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் 2021ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 231 மாணவர்கள் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 82 மாணவர்களுக்கும் ஊக்கத்தொகையும் நற்சான்றிதழும் வழங்கினார்.

“இது மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றியின் முதல் படியாகும். பினாங்கு2030 இலக்கை நோக்கிப் பயணிக்கும் பொருட்டு மாணவர்கள்
கிடைக்கப்பெறும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வதோடு திறன்மிக்க மனித வளமாக உருவாக வேண்டும்,” என எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் அரசு பொதுத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான விருதளிப்பு விழாவில் மாநில முதல்வர் இவ்வாறு கூறினார்.

பினாங்கு மாநிலம் தேசிய அளவிலான
ஒட்டுமொத்த தரப் புள்ளி சராசரியான (CGPA)2.79 காட்டிலும் அதிகமாக 2.85 CGPA பதிவு செய்து சாதனைப் படைத்துள்ளது. இது 2020 ஆண்டை விட (2.83) பெருமைமிக்க பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

“எஸ்.பி.எம் தேர்வைப் பொறுத்தவரை, மாநிலத்தில் தேர்வு எழுதிய 20,048 பேரில் 86.03 சதவீதம் அல்லது 15,520 பேர் சான்றிதழ் பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்று அறியப்படுகிறது.

“எஸ்.டி.பி.எம் தேர்வில் PNGK4.0
சிறந்த தேர்ச்சி பெற்ற 82 மாணவர்களுக்கு ரிம1,000 மற்றும் நற்சான்றிதழ்; இன வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 15 மாணவர்களுக்கு ரிம1,000 மற்றும் விருது; சிறப்பு தேர்ச்சி பெற்று முன்னிலை வகிக்கும் 5 மாணவர்களுக்கு ரிம1,000 & விருது வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.

“மேலும், எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற 231 மாணவர்களுக்கு ரிம500 மற்றும் நற்சான்றிதழ்; சிறப்பு தேர்ச்சி பெற்று முன்னிலை வகிக்கும் 5 மாணவர்களுக்கு ரிம500 வழங்கப்பட்டன.

“அதேவேளையில்,எம்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த அடைவுநிலை பெற்ற மூன்று பள்ளிகளுக்கும் விருது மற்றும் மானியம் வழங்கப்பட்டன,” என
இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக நடத்தப்படும் இந்த விருதளிப்பு விழாவில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங்; மாநில துணைச் செயலாளர் (நிர்வாகம் மேலாண்மை) டத்தோ அமாட் ரிசால்; மாநில கல்வி இலாகாவின் துணை இயக்குநர் (கல்வித் துறை) ஹாஜி ரோலான்@ரோஷாய்டி அபு ஹாசான்; பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் ரிம232,000 ஊக்கத்தொகையை மின்னனு நிதி பரிமாற்றம் (EFT) மூலம் வழங்கப்படுகிறது.

கெளரி,20 எஸ்.டி.பி.எம் தேர்வில் PNGK4.0 பெற்று சிறந்த மாணவராகவும் இன வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 15 மாணவர்களில் ஒருவராகவும் அங்கீகரிக்கப்பட்டார்.

“இருமுறை நற்சான்றிதழ் பெற்றதில் மகிழ்ச்சிக் கொள்வதோடு அவரின் தாயார் மற்றும் தாத்தாவின் அர்ப்பணிப்புக்கு மனமார்ந்த நன்றியும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். ஆறாம் படிவம் முதலாம் தவணை முதல் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தினால் இயங்கலை வகுப்புக்கள் நடத்தப்பட்டது. நேரடி வகுப்புகள் காட்டிலும் இயங்கலை வகுப்புகள் பல சவால்கள் நிறைந்ததாகக் காணப்பட்டது.

“தற்போது மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் இளங்கலை பட்டம் பயில்கிறேன்,என்றார்.

மலேசிய சபா பல்கலைக்கழகத்தில் பொருளாதார நிதியியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இரா.மீனதர்ஷினி,20 எஸ்.டி.பி.எம் தேர்வில் PNGK 3.92 பெற்று சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 15 மாணவர்களில் ஒருவராக நற்சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார். தேர்வு எதிர்நோக்கும் காலக்கட்டத்தில் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சவால்களுடன் இந்த தேர்வை எழுதியதாகக் கூறினார்.

எஸ்.டி.பி.எம் தேர்வைப் பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லாமல் ஹாஜி ஜாய்னுல் அபிடின் ஆறாம் படிவ கல்லூரி ஆசிரியர்களின் வழிகாட்டலில் மட்டுமே இத்தேர்வை எழுதி PNGK 3.92 பதிவுச் செய்ததாகக் கூறினார். தனது கல்லூரி ஆசிரியர்களான டாக்டர் ஷாமலா, திருமதி சரஸ், கோர், நாஷிரா மற்றும் அனிஷா ஆகியோருக்கு நன்றித் தெரிவித்தார். பொதுவாகவே, எஸ்.டி.பி.எம் தேர்ச்சி என்பது பலரால் புறக்கணிக்கப்படும் தேர்வாகும். இருப்பினும், எஸ்.டி.பி.எம் தேர்வு அதற்கான ஒரு தனித்துவத்தைக் கொண்டிருப்பதாகவும் விடாமுயற்சியுடன் படித்தால் சிறந்த தேர்ச்சி பெறுவது உறுதி என முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறினார்.