ஓட்டுநர்கள் தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் பதிவு செய்வது அவசியம்–முதல்வர்.

ஜார்ச்டவுன் – வாடகைக்கார் ஓட்டுநர்கள் இம்மாநிலத்தின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை இணைக்கும் சிறு தூதராக செயல்படுகின்றனர் என ஶ்ரீ பினாங்கு அரங்கத்தில் நடைபெற்ற வாடகைக்கார் மற்றும் பேருந்து ஓட்டுநருக்கான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் புகழாரம் சூட்டினார். எனவே, அனைத்து வாடகைக்கார் ஓட்டுநர்கள் குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது மாநில அரசின் கௌரவத்தையும் நற்பெயரையும் பராமரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ள வருகையளித்த வாடகைக்கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள்

மேலும் மாநில முதல்வர் கூறுகையில், அனைத்து வாடகைக்கார் ஓட்டுநர்கள் சிறந்த சேவையை வழங்கி, பயணிகளுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனிடையே, அன்று பேருந்து ஓட்டுநர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. “பேருந்து ஓட்டுநர்கள் மாணவர்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும், விவேகத்துடன் பேருந்தைச் செலுத்தி எப்போதும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பயணிக்க வேண்டும்”, எனவும் மாநில முதல்வர் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார். சுமார் 2,571 வாடகைக்கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் ரிம 300-ஐ ஊக்கத்தொகையாக பெற்றுக்கொண்டனர். இதற்கு மாநில அரசு ரிம771,300 மானியம் ஒதுக்கியுள்ளது பாராட்டக்குரியதாகும்.

நில பொதுப் போக்குவரத்து துறை (APAD) வெளியிட்டுள்ள பட்டியலின்படி 2,061 வாடகைக்கார் ஓட்டுநர்கள் சட்டப்பூர்வமாக பதிவுப்பெற்றுள்ளனர். இதில் 1,428 ஓட்டுநர்கள் தீவுப்பகுதியிலும் எஞ்சிய 633 பேர் பெருநிலப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.இதனிடையே, 510 பேருந்து ஓட்டுநர்கள் முறையான அனுமதி உரிமத்தைப் பெற்று இந்த ஊக்கத்தொகை பெற தகுதிப்பெற்றவர்களாவர். இதில் 248 ஓட்டுநர்கள் தீவுப்பகுதியிலும் 262 பேர் செபராங் பிறையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

எட்டாவது ஆண்டாக வாடகைக்கார் மற்றும் பேருந்து ஓட்டுநருக்கு வழங்கப்படும் இம்மானியத்திற்கு மாநில அரசு இதுவரை ரிம9.096 கோடி நிதி வழங்கியுள்ளது பாராட்டக்குரியதாகும். ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய அனைத்து வாடகைக்கார் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் (பெர்கேசோ) கீழ் காப்புறுதி பெற்றிருக்க வேண்டும் என மாநில முதல்வர் அறிவுறுத்தினார். வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கு இக்காப்புறுதி 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வேளையில் பேருந்து ஓட்டுநர்களுக்கு பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.இக்காப்புறுதி பணியில் இருக்கும் ஓட்டுநர்களின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம். எனவே, இன்னும் தங்களை பதிந்து கொள்ளாத ஓட்டுநர்கள் உடனடியாக பதிவுச் செய்வதன் மூலம் அவர்களின் நலன் பதுகாக்கப்படுவதோடு குடும்பத்திற்கு நன்மை பயக்கும் என்பது வெள்ளிடைமலையே.