கற்றல் கற்பித்தலை வீட்டிலிருந்து மேற்கொள்ள மடிக்கணினிகள் அன்பளிப்பு

Admin

புக்கிட் மெர்தாஜாம் – வருகின்ற நோன்புப் பெருநாள் விடுமுறைக்கு பின்பு மாணவர்கள் மேலும் இரு வாரங்களுக்கு  கற்றல் கற்பித்தலை வீட்டிலிருந்து மேற்கொள்ளும் முறை அமலாக்கம் காண்கிறது. இச்சூழலில்,  வசதி குறைந்த மாணவர்கள் இம்முறையில் கல்வி கற்க போதுமான டிஜிட்டல் சாதனங்கள் இல்லாமல் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். 

எனவே, வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு கடந்த ஆண்டு தொடங்கி பினாங்கு மின் கற்றல் கணினி திட்டத்தை வழி நடத்தி வருகிறது. 

இத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் கடந்த  மே, 7-ஆம் நாள் அன்று  மலேசியா செமிகண்டக்டர் தொழில்துறை  சங்கம், ரிம 2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியது.  

இந்த நிதியுதவி 1,562 கணினிகள் வாங்கி மாணவர்களுக்கு வழங்கப்படும்.இத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் பல தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் சுயமாக முன்வந்து  
கணினிகளை  நன்கொடையாக வழங்குகின்றனர். 

புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம், மே,8 நாள் அன்று தனது சேவை மையத்தில் 37 மாணவர்களுக்கு 20 மடிக்கணினிகள் மற்றும் 17 ‘டேப்லெட்’ வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இடைநிலைப்பள்ளி (படிவம் 4, 5, 6) மற்றும் இளங்கலை பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட 20 மடிக்கணினிகளில் 10-ஐ நன்கொடையாக வழங்கிய ஜுவென் பினா சென் பெர்ஹாட் நிறுவனத்திற்கு நன்றி கூறினார். .

இடைநிலைப்பள்ளி மாணவர்கள் (படிவம் 1, 2, 3) மற்றும் ஆண்டு நான்கு, ஐந்து மற்றும் ஆறு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்பட்டன.

“மின்-கற்றல் சகாப்தத்தில் கணினிகள் மற்றும் பிற தொடர்பு சாதனங்கள் மிகவும் அவசியம். இன்னும் அதிகமான வசதி குறைந்த மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களால் இதனை வாங்க   முடியாத நிலையில் உள்ளனர். 

“இதுவரை, நாங்கள் சுமார் 500 கணினிகளை வழங்கியுள்ளோம். இருப்பினும், மற்ற மாநிலங்கள் உட்பட 3,000 முதல் 4,000 விண்ணப்பங்களை இதுவரை பெற்றுள்ளோம்.

“நாங்கள் இத்திட்டத்தை நிறுத்த மாட்டோம். ஆனால் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்.  பொதுவாக, கணினிகளைப் பெறும்போதெல்லாம், அவற்றை தகுதியுள்ளவர்களுக்கு வழங்குவோம். பி40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, எம்40 குழுவிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களின்  சூழலுக்கு ஏற்ப  உதவிகள் நல்கப்படும் என்று சிம் கூறினார். 

“குறிப்பாக எம்40 குழுவைச் சேர்ந்த மாணவர்களின் குடும்ப சூழல் கோவிட்-19 தாக்கத்தால்  பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் விண்ணப்பங்களுக்கு மடிக்கணினிகள் வழங்க உத்தேசிக்கப்படும்.