ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி வகுப்பு

Admin

பட்டர்வொர்த் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு அருள் நிலையம் ஆகியோர் இணை ஏற்பாட்டில் குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களை சேர்ந்த ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

அண்மையில் பட்டர்வொர்த், ஶ்ரீ மாரியம்மன் ஆலய அரங்கத்தில் தொடங்கப்பட்ட கணினி மையத்தில் இந்த வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இரு பிரிவுகளாக பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் பிரிவு 7 வயது முதல் 9 வயது நிரம்பிய மாணவர்களுக்கும்; இரண்டாவது பிரிவில் 10 வயது முதல் 12 வயது நிரம்பிய மாணவர்களும் இந்த வகுப்பில் இடம் பெறுவர்.

ரீ மாரியம்மன் ஆலய அரங்கத்தில் தொடங்கப்பட்ட கணினி மையம்

இந்த வகுப்புகள் 12 குழுக்களாக (ஒரு குழுவில் 10 மாணவர்கள்) 120 மாணவர்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படும். இந்த மாணவர்களுக்கான கணினி பயிற்சிகள் ஆசிரியை எஸ்.கோமதி ,ஆர்.சாந்தி , ஆசிரியர் எஸ்.அன்பழகன் ஆகியோர் வழி நடத்தவுள்ளனர்.

“வருங்காலத்தில் அனைத்தும் கல்விகளும் கணினி யுகமாக மாறக்கூடிய காலகட்டமிது ஆகையால் மாணவர்களை கணினி யுகத்திற்கு தயாராக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சிகளை தொடங்கப்பட்டுள்ளது”, என மலேசிய இந்து தர்ம மாமன்ற பினாங்கு அருள் நிலையத்தின் தலைவர் ந.தனபாலன் கூறினார்.

“வசதி குறைந்த மாணவர்கள் தனியார் நிலையங்களுக்கு சென்று இது போன்ற கல்வியை பெற வாய்ப்புகள் அரிதாகும். இதனால் இலவசமாக இந்த வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்கப்படும்.

“இதனால் மாணவர்கள் பொது அறிவுடன் கணினி வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து டிஜிட்டல் உலகத்தில் தங்களை தயார்படுத்திக் கொள்ள சிறப்பான வாய்ப்பாக அமையும்,” என்றும் அவர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

இக்கணினி வகுப்பில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் மலேசிய இந்து தர்ம மாமன்றம் பினாங்கு அருள் நிலையம் தலைவர் ந.தனபாலனை 016-4822879 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.