குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய பாலம் அமைக்கப்பட்டது

ஶ்ரீ டெலிமா – மாநில அரசு உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஜாலான் கங்சா அருகாமையில் புதிய பாலம் மற்றும் ஆற்றங்கரையை வலுப்பத்தும் திட்டம் மேற்கொண்டது. இத்திட்டம் கடந்த செப்டம்பர், 22-ஆம் தேதி முழுமையாக நிறைவடைந்தது.
ஶ்ரீ டெலிமா மாநில சட்டமன்ற உறுப்பினர் செர்லீனா அப்துல் ரஷீத் கூறுகையில், இத்திட்டம் பாதுகாப்பு பிரச்சனையைத் தீர்ப்பது மட்டுமின்றி அருகிலுள்ள ஆறுகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“ இது ஜெலுதோங் ஆறு மற்றும் சுற்றுவட்டாரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கான நதி மறுவாழ்வு மற்றும் பாதுகாப்புத் திட்டமாகும்.

“முந்தைய பாலம் முழுமையான வசதியின்றி அப்பாலத்தின் பாதி இடிந்து விழுந்து காணப்பட்டது. எனவே நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையின் கீழ் மேற்கொண்ட இந்த திட்டம் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கு மிகவும் பயனளிக்கிறது, மேலும் வெள்ள அபாயத்தையும் குறைக்கிறது, ” என சட்டமன்ற உறுப்பினர் செர்லீனா, கிரீன் லேன் ஹைட்ஸ் அருகே உள்ள இத்திட்ட தளத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் வடகிழக்கு மாவட்ட நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை பொறியாளர் நார்திலாவதி ஒஸ்மான் மற்றும் கம்போங் நிர்வாக செயல்முறை கழகம் (எம்.பி.கே.கே) உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் முதல் கட்டமாக ரிம252,300 பொருட்செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் 24மீட்டர் நீளமும் 1.8 மீட்டர் அகலமும் கொண்ட பாலம் அமைத்தல், 200 மீட்டர் நீளமுள்ள ஆற்றங்கரையை வலுப்படுத்துதல் மற்றும் படிக்கட்டுகள் அமைத்தல் ஆகியவை அடங்கும்.
இத்திட்டம் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டு 12வாரங்கள் கால அவகாசத்தில் நிறைவுப்பெற்றுள்ளது.

இரண்டாவது கட்டமாக, பினாங்கு மாநகர் கழகத்திடம் (எம்.பி.பி.பி) விண்ணப்பித்து ஒரு ‘கெஸெபோ’, நடைப்பயிற்சி பாதை மற்றும் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளதாக செர்லினா குறிப்பிட்டார்.